Breaking News

திடுக்கிடும் தகவலை வெளியிட்ட தயாசிறி – தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்படும் சாத்தியம் !

 

உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை வெளிவராத அதிர்ச்சிமிக்க தகவலொன்றை வெளியிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம் பியிடம் , அது தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள அந்த சம்பவங்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு உத்தேசித்து வருவதாக அறியமுடிகின்றது.

நேற்று தெரண தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாசிறி , தற்கொலைதாரிகள் ஏன் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெடிப்பை மேற்கொள்ளவில்லை என்றும் , அந்த சமயத்தில் அங்கு இருந்தவர்கள் யார் என்றும் கேள்வியெழுப்பியிருந்தார்.

அந்த சமயத்தில் அங்கிருந்த புள்ளிகள் யாரென அறிந்துகொண்டால் சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்களையும் இலகுவில் அறியலாமென்றும் – எல்லாவற்றையும் அறியும் ஊடகவியலாளர்கள் இதனையும் அறிய முயலவேண்டுமென தயாசிறி இதன்போது குறிப்பிட்டார்.

தயாசிறியின் இந்த கருத்து அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருப்பதால் – அவரை அழைத்து இதுகுறித்து மேலும் தகவலை பெறுவது பற்றி – தாக்குதல்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு யோசனை செய்துள்ளது.