இலங்கை

தாக்குதல் சம்பவங்களின் முக்கிய தரவுகளை சபையில் வெளியிட்டார் மைத்ரி – ஊடகங்கள் பொறுப்பாக செயற்படவும் வலியுறுத்து !

 

தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான பல முக்கிய தரவுகளை இன்று பாராளுமன்றத்தில் வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , இன்னும் ஓரிரு நாட்களுக்குள் எஞ்சிய சந்தேக நபர்களை கைதுசெய்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது ,

அனைத்து தரப்புடனும் நான் பேச்சு நடத்தினேன்.நான் தனியாக எந்தக் கூட்டத்தையும் நடத்தவில்லை. பாதுகாப்பமைச்சில் மாற்றம் செய்தேன். படைகளிலும் மாற்றம் செய்தேன். நாட்டின் மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுத்தேன்.

கைதான 56 பேரில் 12 முக்கிய பேர் உள்ளனர். .அவர்கள் முக்கிய புள்ளிகள். 13 வீடுகள் – 103 டெட்டனேட்டர்கள் – 236 ஜெலிக்னைட் குச்சிகள் – 41 வங்கிக் கணக்குகள் 15 வாகனங்கள் 4 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக உதவிய ஒருவருக்கு தலா 20 லட்ச ரூபா வழங்கப்பட்டுள்ளது.ஒரு கோடியே 80 லட்ச ரூபா இப்படி வழங்கப்பட்டுள்ளது.

இது சர்வதேச பிரச்சினை. இந்த இயக்கங்களின் பெயர்களை நான் பாவிக்க மாட்டேன். அது அவர்களுக்கு அங்கீகாரமாக போய்விடும்.உலக தலைவர்களை பின்பற்றி நானும் அந்த இயக்கங்களின் பெயர்களை பாவிக்கமாட்டேன் .

பயங்கரவாதிகள் அழிக்கப்பட வேண்டும் என்பதை நான் கூறியுள்ளேன்.சிங்கள மக்கள் முஸ்லிம் மக்கள் மீது அச்சத்துடன் சந்தேகத்துடன் பார்க்கின்றனர்.தமிழர்களுக்கும் அப்படியே . ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். வடக்கில் இராணுவம் தேவை என்ற தமிழ் தலைவர்களின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்.

தமிழர் எல்லோரும் புலிகள் என்று முன்னர் வந்த சந்தேகத்தால் பேரழிவு ஏற்பட்டது. 83 கலவரம் காரணமாக புலிகள் பலமாகினர்.அப்படியான நிலைமையில் சிங்கள முஸ்லிம் உறவு பாதிக்காதிருக்க செயற்பட வேண்டும். தவறான செய்திகளை நம்பி செயற்பட வேண்டாமென நான் சிங்கள மக்களை கேட்க விரும்புகிறேன். முஸ்லிம்களின் மனம் நோகாமல் அவர்களை பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தி செயற்பட நான் பாதுகாப்பு தரப்பை கேட்டுள்ளேன். பாதுகாப்பு செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு முழு அதிகாரத்தை வழங்கியுள்ளேன்.

நான் பொலிஸ் திணைக்களத்தை பொறுப்பேற்று நான்கு மாதங்கள் தான்.கசிப்பு காய்ச்சுவதை தடுக்க கூட அதிகாரம் இல்லாமல் தான் பொலிஸ் இருந்தது.இப்போது அப்படியல்ல. இன்னும் ஓரிரு நாட்களில் எஞ்சிய சந்தேகநபர்கள் அனைவரையும் கைது செய்யவுள்ளோம். தீவிரவாதிகள் எப்போது என்ன செய்வார்கள் என்று யாருக்கும் தெரியாது .

எதிர்க்கட்சித் தலைவர் வழங்கிய ஒத்துழைப்பை நான் பாராட்டுகிறேன்.இப்படியான நேரத்தில் நாம் ஒன்றுபட்டு செயற்படுவோம்.நான் தான் இந்த இயக்கத்தின் தலைவர் என்பது போல சிலர் பேசுகின்றனர். அது தவறு. எல்லோரும் ஒன்றுபட்டு செயற்படுவோம்.