உலகம்

தலிபான் – ஆப்கானிஸ்தான் அமைதி முயற்சி

தலிபான்களுக்கும் அரசாங்க அதிகாரிகள் உட்பட செல்வாக்குமிக்க ஆப்கானியர்களுக்கும் இடையிலான முக்கிய சமாதான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.

18 ஆண்டுகால யுத்தத்தின் முடிவை விரைவுபடுத்தக்கூடிய அமைதி முயற்சிக்கு இருதரப்புக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்கள் உயிரிழப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், ‘இஸ்லாமிய கட்டமைப்பிற்குள்’ பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் யோசனை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தமது படையினரை திரும்பப் பெறுவது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதால், இந்த இணக்கப்பாட்டை எட்ட முடிந்திருப்பதாக கூறப்படுகிறது.

2001ல் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தலிபான்களை தோற்கடித்தது.

அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்திற்கான தளமாக பயன்படுத்தப்படாது என்ற உறுதிப்பாடு கிடைக்கப்பெற்றால், அமெரிக்கா தமது துருப்புக்கள் வெளியேற்றும் என்றும் நம்பப்படுகிறது.

இதற்கான அட்டவணை அறிவிக்கப்படும் வரையில் தலிபானியர்கள், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்த மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.