உலகம்

தரையிறங்கும் விமானங்கள்! சிக்கலில் போயிங் 737

எத்தியோப்பியாவில் போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து, அந்த ரக விமானங்களை வர்த்தகப் பயன்பாட்டில் இருந்து நிறுத்துவதாக பிரேஸில், ஆஸ்திரேலியா, தென்கொரியா, ஆர்ஜெண்டீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளின் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பயணிகள் விமானம்(போயிங்-737 மேக்ஸ் 8) ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்த 4 இந்தியர்கள் உள்ளிட்ட 157 பேரும் உயிரிழந்தனர். அதன் எதிரொலியாக, அந்த ரக விமானங்களை வர்த்தகப் பயன்பாட்டில் இருந்து நிறுத்துவதாக சீனா, எத்தியோப்பியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள் திங்கள்கிழமை அறிவித்தன.
இந்நிலையில், போயிங் 737 மேக்ஸ் 8 விமானப் பயன்பாட்டை நிறுத்துவதாக பிரேஸில், ஆஸ்திரேலியா, ஆர்ஜெண்டீனா, தென்கொரியா ஆகிய நாடுகளின் ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக அந்நாடுகளின் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் கூறியுள்ளதாவது:
எத்தியோப்பியாவில் போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் விபத்துக்குள்ளானதால், அந்த விமானத்தின் பாதுகாப்பு குறித்து பயணிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பே முக்கியம் என்பதால் தற்காலிகமாக அந்த விமானங்களின் சேவை நிறுத்தப்படுகிறது.
விமானத்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்திய பின்னர், அந்த விமானம் மீண்டும் பயன்பாட்டுக் கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளன.
இதனிடையே, விமானத்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வு முடிவுகள் வரும் வரை, போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் இயக்கப்படாது என்று சீனா தெரிவித்துள்ளது.
தேவைப்பட்டால் போயிங் நிறுவனத்தின் மீது நடவடிக்கை: போயிங் நிறுவனம் தயாரித்த போயிங் 737 மேக்ஸ் 8 விமானத்தின் பாதுகாப்பில் கோளாறு இருந்தால் அந்நிறுவனத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானங்கள் மிகவும் அதிகமாக விற்கப்பட்டவை. அந்த ரகத்தின் புதிய தயாரிப்பாக போயிங் 737 மேக்ஸ் 8 தயாரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் இந்த ரக விமானம் வெடித்து சிதறியது. இந்நிலையில், எத்தியோப்பியாவில் அண்மையில் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் விபத்துக்குள்ளானது. அதனால் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றும், வரும் ஏப்ரல் மாதம் முடிவதற்குள் அதை செய்து முடிக்க வேண்டும் என்றும் போயிங் நிறுவனத்தை அமெரிக்க விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. எத்தியோப்பியாவில் நடைபெற்ற விமான விபத்து தொடர்பான விசாரணைக் குழுவில், அமெரிக்க விமானப் போக்குவரத்து துறையின் நிபுணர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.