இலங்கை

தமிழ்த்தலைமைகளை ஒன்றிணைக்க சிவில் சமூகம் முன்வர வேண்டும் – சுரேஷ் கோரிக்கை

யாழ் செய்தியாளர்

தமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை உணர்ந்து இனிவரும் தேர்தல்களில் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் அபிலாசைகள் என்பவற்றை அறிய அனைத்து தமிழ் தரப்புகளையும் ஒன்றிணைத்து ஓர் தீர்மானத்துக்கு வர சிவில் அமைப்புக்கள் வழி அமைக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல.எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட மைத்திரி-ரணில் கூட்டரசுக்கு எவ்வித நிபந்தனைகளையும் விதிக்காது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் அவர்கள் இனவாதிகள் அல்லர் என கூறினர்.நல்லாட்சி அரசு உருவகப்பட்டதும் நாம்தான் இந்த ஆட்சியை கொண்டு வந்தோம் என மேடை மேடையாக பிரச்சாரம் செய்தனர்.ஆனால் இப்போது அதே அரசு எம்மை ஏமாற்றி விட்டது என கூறுகின்றனர்.

இவர்கள் அரசுக்கு எவ்வித நிபந்தைகளையும் விதிக்காது தங்களின் நலன்களுக்கா அரசினை காப்பற்றி விட்டு இப்போது தேர்தல் வரப்போகின்றது என்றவுடன் தங்கள் பல்லவியை மாற்றுகின்றனர்.கடந்த கால தவறுகளின் அடிப்படையிலாவது இனிவரும் தேர்தல்களில் தமிழ் தரப்புக்களுக்கு அடிப்படையாக என்னென்ன விடயங்கள் தேவை உடனடியாக என்ன விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் போன்ற விடயங்களை ஆராய்ந்து வியூகம் வகுக்க வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் தரப்புக்களையும் ஒன்றிணைக்க சிவில் சமூகம் முன்வரவேண்டும்.- என்றார் அவர்.