உலகம்

ட்ரம்ப்பிற்கு எதிரான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வெள்ளை மாளிகை மறுப்புஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது ஜனநாயக கட்சி தொடுத்துள்ள பதவிநீக்க விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வெள்ளைமாளிகை மறுத்துள்ளது.

அமெரிக்கக் காங்ரசில் ஜனநாயக கட்சி தலைமையிலான 3 விசாரணைக் குழுக்கள் டொனால்ட் ட்ரம்ப்பை பதவிநீக்குவதற்கு ஏதுவான விசாரணைகளை நடத்திவருகின்றன.

இந்த நிலையில் வெள்ளைமாளிகையில் இருந்து  ஜனநாயக கட்சி தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இந்த ஒத்துழைப்பு மறுப்பு வெளிப்படுத்தபட்டுள்ளது.

ட்ரம்ப் தனது அரசியல் எதிராளியாக கருதும்  முன்னாள் அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜோ பைடெனை வீழ்த்த வெளிநாட்டு நபர் ஒருவரிடம் உதவி கோரிய விடயத்தை மையப்படுத்தி இந்த பதவிநீக்க விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், முதல்முறையாக  இதுத் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், இதுவொரு உச்ச நீதிமன்ற வழக்காக மாறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான விசாரணைக்கு, வெள்ளை மாளிகை ஒத்துழைக்க மறுப்பதானது, நீதிக்கு இடையூறாக அமையும் விடயம் என ஜனநாயகவாதிகள் கூறியுள்ளனர்.