விளையாட்டு

டில்லியில் இன்று ‘பைனல்’ *கோப்பை வெல்லுமா இந்தியா * ஆஸி.,யுடன் ஐந்தாவது சவால்

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்டு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் இந்தியா வென்றது. அடுத்த இரு போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற தொடர் 2–2 என சமனில் உள்ளது. கோப்பை வெல்லும் அணியை நிர்ணியிக்கும் பைனல் போன்ற ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி இன்று டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடக்கிறது.

பேட்டிங் சுமார்

இந்திய அணிக்கு துவக்கத்தில் ஷிகர் தவான், ரோகித் சர்மா நம்பிக்கை தரத் துவங்கியுள்ளனர். ‘மிடில் ஆர்டர்’, பின் வரிசை வீரர்கள் சொதப்பல் தொடர்கிறது.

இதனால் தான் கடந்த முறை சிறப்பான துவக்கம் கொடுத்த போதும் கடைசி நேரத்தில் பெரியளவில் ஸ்கோர் எடுக்காமல் விக்கெட்டுகளை இழந்தனர். லோகேஷ் ராகுலுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதற்காக கேப்டன் கோஹ்லி 4வது இடத்துக்கு செல்லக் கூடாது. சொந்தமண்ணில் ராசியான 3வது இடத்தில் களமிறங்கி அணியின் ஸ்கோரை உயர்த்த கைகொடுக்க வேண்டும்.

உலக கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி பங்கேற்கும் கடைசி போட்டி இது. இதில் கிடைக்கும் வாய்ப்புகளை வீரர்கள் சரியாக பயன்படுத்தினால் நல்லது. லோகேஷ் ராகுல் ஏமாற்ற, ரிஷாப் பன்ட், பேட்டிங், விக்கெட் கீப்பிங் என இரண்டிலும் ஏமாற்றுகிறார். இன்று சுதாரித்துக் கொண்டால் நல்லது. விஜய் சங்கர், கேதர் ஜாதவ் நம்பிக்கை தருகின்றனர்.

பவுலிங் ஏமாற்றம்

சமீபத்திய போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு பவுலிங் முக்கிய காரணமாக இருந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடந்த இரு போட்டிகளிலும் பவுலிங் எதிர்பார்த்தபடி அமையவில்லை. இதனால் 358 ரன்கள் எடுத்த போதும் இந்தியா வெற்றி பெற முடியவில்லை. பும்ரா, புவனேஷ்வர், ஜடேஜாவுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட சகால் என பலரும் ரன்களை வாரி வழங்கினர். குல்தீப் மட்டும் சற்று ஆறுதல் தருகிறார். இன்று மீண்டும் ஜடேஜா வரலாம். அணியின் பீல்டிங்கும் மோசமாக உள்ளது. இதில் முன்னேற்றம் கண்டால் நல்லது.

அச்சுறுத்தும் டர்னர்

ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், ஷான் மார்ஷ் தவிர மற்றவர்கள் சிறப்பான ஆட்டத்தை தருகின்றனர். கவாஜா ‘டாப் ஆர்டரில்’ நல்ல துவக்கம் தருவது, ஹேண்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல் கைகொடுப்பது, ஸ்டாய்னிஸ் காயத்தால் மாற்றாக வந்த டர்னரின் அச்சுறுத்தும் பேட்டிங் என எல்லாம் சேர்ந்து அணிக்கு எழுச்சி தந்துள்ளது. பவுலிங்கில் கம்மின்ஸ், சுழல் வீரர் ஜாம்பா இந்திய அணிக்கு பெரும் தொல்லையாக உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி 0–2 என பின்தங்கிய தொடரில் ஒருபோதும் கோப்பை வென்றது இல்லை. இதற்கேற்ப இந்திய வீரர்கள் சுதாரித்துக் கொண்டு இன்று சாதிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி இல்லை ‘ஐந்து

கடந்த 2001 க்குப் பின் இரு அணிகள் மோதும் ஒருநாள் தொடரில் குறைந்தது 5 அதிகம் 7 போட்டிகள் வரை பங்கேற்ற ஐ.சி.சி., அனுமதி தந்தது. வரும் மே 2020 முதல், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டும் தான் விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பது இது தான் கடைசி.

தடுமாறும் கோஹ்லி

கேப்டன் பணியில் கோஹ்லி சொதப்புவதாக தெரிகிறது. ராஞ்சி, மொகாலி போட்டிகளில் மைதானத்தின் தன்மையை கணிக்கத் தவறியது, பும்ராவை எந்த நேரத்தில் எப்படி பயன்படுத்துவது என்ற விஷயத்திலும் சொதப்பினார். பெரும்பாலும் கேப்டன் வேலையை தோனி கவனித்து வருகிறார். இவர் இல்லாத நேரத்தில் எப்படி முடிவு எடுப்பது என்பதில் கோஹ்லி தடுமாறுகிறார்.

சுழலுக்கு சாதகம்

டில்லி பெரோஷா கோட்லா மைதானம் பெரும்பாலும் சுழலுக்கு சாதகமாக இருக்கும். இடது கை சுழலுக்கு அதிகம் உதவும் என்பதால் ஜடேஜா களமிறங்குவார் என நம்பப்படுகிறது.

மழை ‘நோ’

டில்லியில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். வெப்பநிலை அதிகபட்சம் 25, குறைந்தபட்சம் 18 டிகிரி செல்சியசாக இருக்கும். மழை வர வாய்ப்பு குறைவு.