உலகம்

டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்யக் கோரும் எண்ணமில்லை: நான்சி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்வதற்கான முயற்சிகளை நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளும் எண்ணமில்லை என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர் நான்சி பெலோசி தெரிவித்தார்.
மேலும், அவ்வாறு தகுதி நீக்கம் செய்யுமளவுக்கு டிரம்ப்பை தாம் மதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவாக ரஷியா தலையீடு செய்ததாகக் கூறப்படுவது குறித்து சிறப்பு விசாரணை அதிகாரி ராபர்ட் முல்லரின் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணைகளில், டிரம்ப்பின் முன்னாள் உதவியாளர்கள் பலர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. அவரது முன்னாள் வழக்குரைஞர் மைக்கேல் கோஹென் கடந்த மாதம் அளித்த வாக்குமூலத்தில், டிரம்ப் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என கடுமையாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், டிரம்ப்புக்கு நெருக்கமானவர்கள் மீதான குற்றச்சாட்டுகள், அவர்கள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் அவரை தகுதி நீக்கம்
செய்வதற்கான நடவடிக்கைகளை ஜனநாயகக் கட்சியினர் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளலாம் என்று ஒரு சிலர் தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து ஜனநாயகக் கட்சி எம்.பி.யும், நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைத் தலைவருமான நான்சி பெலோசியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் கூறியதாவது:
அதிபரை தகுதி நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வர வேண்டுமென்றால், நாட்டில் மிகப் பெரிய பிரச்னைகள் மற்றும் அதிபருக்கு எதிரான மாபெரும் கிளர்ச்சி உருவாக வேண்டும்.
எனவே, தற்போதைய சூழலில் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்வதற்கான முயற்சியை நாங்கள் மேற்கொள்ள மாட்டோம். காரணம், அது நாட்டை பிளவுபடுத்துவதாக அமையும்.
அதுமட்டுமன்றி, தகுதி நீக்கம் செய்யும் அளவுக்கு டிரம்ப் மதிப்பு வாய்ந்தவர் அல்ல என்று நான்சி பெலோசி கூறினார்.