Breaking News

டிக்கோயாவில் சந்தேகத்திற்கிடமான ஒருவர் பிடிபட்டார் – சோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதி

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா

கொரோனா தொற்றாளர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் டிக்கோயா பகுதியில் சுற்றித்திரிவதை கண்ட பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமைய பொலிஸாரும் பொது சுகாதார பரிசோதகர்களும் அந்த நபரை இன்று இரவு 08 மணியளவில் மீட்டுள்ளனர்.

இவர் கடவத்தை இஹலபியன்வில பகுதியை சேர்ந்த 56 வயதுடையவர் என்றும் கொழும்பு கொம்பனித்தெருவில் கூலி வேலை செய்பவர் என்றும் தெரியவந்துள்ளது.

கொழும்பில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதையடுத்து கண்டி பகுதிக்கு சென்று கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் அட்டன் பிரதேசத்திற்கு வந்தடைந்துள்ளதுடன் அட்டன் பிரதேசத்தில் சுற்றித்திரிந்துள்ளார்.

குறித்த நபர் டிக்கோயா பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நிலையிலே பொதுமக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸாரும் பொதுசுகாதார பரிசோதகர்களும் பாதுகாப்பு ஆடைகள் அணிந்து அவர் அருகே சென்று விசாரணையை மேற்கொண்டதுடன் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.

குறித்த நபருக்கு இருமல் உட்பட நோய்க்கான அறிகுறிகள் இருந்தபடியால் சந்தேகத்தின் பேரில் அவசர அம்புலன்ஸ் சேவையினூடாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டார்.