இலங்கை

ஞானசார தேரரை விடுதலை செய்த உங்களுக்கு சிறையில் வாடும் தமிழ் இளைஞர்கள் தெரியவில்லையா ? – மாவை சபையில் கேள்வி

ஞானசார தேரரை விடுதலை செய்த அரசுக்கு பல வருடங்கள் சிறையில் வாடும் தமிழ் இளைஞர்களை தெரியவில்லையாவென அவசரகால சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மாவை சேனாதிராஜா எம் பி இன்று பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார் .
அவர் மேலும் கூறியதாவது ,

அவசரகால சட்டத்தால் தமிழ் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். தென்னிலங்கையை விட மிகவும் கடுமையான நடவடிக்கைகள் வடக்கில் மேற்கொள்ளப்பட்டன. இராணுவம் எங்களுடைய மாணவர்கள் அவர்களது புத்தகப் பைகளை சோதனையிடும்போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும். இப்போதுள்ள தொழிநுட்ப வசதிகளை கொண்டு மாணவர்கள் ஐ எஸ் எல்லாம் பற்றி தேடினால் அவர்களின் சிந்தனை என்னவாகும் ? இதையெல்லாம் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.

இன்று ஞானசார தேரரை விடுதலை செய்ய உங்களால் முடியுமாயின் ஏன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்துவைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை ஏன் விடுதலை செய்ய முடியாது ?

இன்று இவர்களின் விடுதலைக்காக சட்டத்தரணிகளை நியமித்து வாதாட முடியாத நிலையில் கூட பலர் உள்ளனர். பயங்கரவாத தடை சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் .

இந்த பிரச்சினைகளை காரணம் காட்டி இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.இராணுவ நிலைகொள்ளல் தொடர்கிறது. இதனால் இப்படியான சட்டங்களுக்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் – என்றார் மாவை எம் பி