இலங்கை

ஜெனீவா இராஜதந்திரப்போரில் தோற்றது இலங்கை – திருத்தங்களை ஏற்க மேற்குலகம் மறுப்பு – ஜனாதிபதி தரப்பு சீற்றத்தில் !

 

இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில் ஜெனீவாவில் பல நாடுகள் இணைந்து கொண்டுவரும்யோசனையில் திருத்தங்களை செய்ய ஜனாதிபதி தரப்பு எடுத்த முயற்சிகள் கைகூடவில்லையென இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து நம்பகமாக அறியமுடிகின்றது.

ஜெனீவாவில் தங்கியுள்ள இலங்கை அரசின் பிரதிநிதிகள் இது தொடர்பில் பல சுற்று பேச்சுக்களை நடத்திய போதும் மேற்குலக இராஜதந்திரிகள் எவரும் அசைந்து கொடுக்கவில்லையென தெரிகிறது.

பொறுப்புக்கூறும் கடப்பாட்டை நிறைவேற்றுதல் உட்பட்ட விடயங்களுக்கு கால அவகாசம் வழங்குவது குறித்த விடயத்தில் இலங்கைக்கு நிபந்தனைகள் எதனையும் விதிக்கக் கூடாதென இலங்கை அரசின் பிரதிநிதிகள் வலியுறுத்தியபோதும் ,இலங்கை அரசு ஏற்கனவே பல விடயங்களுக்கு இணக்கம் தெரிவித்த காரணத்தினால் இறுதி நேர திருத்தங்களை செய்ய முடியாதென இராஜதந்திரிகள் கைவிரித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த விடயங்களுக்கான ஆலோசனை பிரதமரின் அலுவலகத்தில் இருந்து ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிட அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தை அறிவுறுத்தாமல் இப்படியான உத்தரவுகளை வழங்கியது யார் என்பது குறித்து ஜனாதிபதி தரப்பில் தற்போது ஆராயப்படுவதாகவும் அறியமுடிகின்றது.