உலகம்

ஜெட் எயார்வேஸ் ஊழியர்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்

ஊழியர்களின் சம்பளப் பிரச்சனை விடயத்தில் ஜெட் எயார்வேஸ் நிர்வாகத்திற்கும் பைலட்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் தற்போது நாளை திங்கட்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும், விமானத்தை இயக்க மாட்டோம் என்றும் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இதுவரை சம்பள பாக்கியும் தரப்படாததை அடுத்து, மீண்டும் நாளை முதல் பைலட்கள் விமானத்தை ஓட்ட மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். பைலட்கள் மட்டும் இன்றி இன்ஜினியர்கள் மற்ற ஊழியர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
சுமார் 1100 பைலட்கள் நாளைய வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்

ஏற்கனவே பைலட்கள் – தங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டே ஜெட் எயார்வேஸ் விமானங்களை இயக்கி வந்தனர். இந்த நிலையில் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபட்டால் விமான சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சரியான நேரத்தில் சம்பளம் இல்லை

தொடர் நஷ்டம், வங்கி கடன் அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் ஜெட் எயார்வேஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே ஊழியர்களுக்குச் சரியான நேரத்தில் சம்பளத்தை அளிக்க முடியாமல் தவித்து வந்தது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் வரை மட்டுமே ஊழியர்கள் முழு சம்பளத்தையும் வாங்கியிருந்தனர். அதேசமயம் டிசம்பர் மாதத்தில் 12.5 சதவிகித சம்பளத்தை மட்டுமே பெற்றிருந்தனர்.