உலகம்

ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கு பஸ் விபத்தில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு

 

இந்திய ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று காலை அதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற மினி பஸ் ஒன்று சாலையில் இருந்து சறுக்கி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் 35 பேர் உயிரிழந்தனர், 17 பேர் காயமடைந்தனர்.

விபத்துக்கான சரியான காரணம் தெரியவரவில்லை விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் மினி பஸ்சில் அதிகமான சுமை ஏற்றப்பட்டுள்ளது என மாவட்ட அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்முவில் சிறப்பு மருத்துவ சிகிச்சைக்காக பலத்த காயமடைந்தவர்களை கொண்டுசெல்ல ஹெலிகாப்டர்கள் கோரப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ் விபத்து நடந்த கிஷ்த்வார் பகுதி ஜம்முவிலிருந்து 230 கி.மீ தூரத்தில் உள்ளது.

கிஷ்த்வார் எஸ்.எஸ்.பி. சக்தி பதக் கூறுகையில், “சாலையின் நிலை மோசமாக இருந்தது, வாகனத்திலும் அதிகமான சுமை இருந்துள்ளது. வளைவில் சென்ற போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தாக்கில் உருண்டதாக தெரிகிறது. பயணிகளில் 20 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், மேலும் காயமடைந்தவர்களின் சிலர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்,” என குறிப்பிட்டுள்ளார். இப்போது உயிரிழப்பு எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்துள்ள 17 பேரில் சிலரது நிலை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.