Breaking News

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் – ஐ.தே .க பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் அமளி !

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் இன்று மாலை கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் தலைமையில் கூடியபோது , ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தால் கூட்டத்தில் அமளி ஏற்பட்டதாக தெரியவந்தது.

பிரதமரின் உத்தியோகபூர்வ அலுவலகமான அலரி மாளிகையில் நடந்த இந்தக் கூட்டத்தின்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் கபீர் ஹாஷிம் , கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவா என்று பலர் தம்மிடம் கேட்பதாகவும் அதற்கு கட்சியின் பதில் என்ன என்பதை பற்றியும் வினவியுள்ளார்.

அப்போது சஜித்தின் ஆதரவாளர்கள் சஜித்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க – நிலைமை தீவிரமானது. அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட்ட பலர் ஜனாதிபதி வேட்பாளராக இருக்கவேண்டியவரின் தகுதி குறித்து பேசியதால் கூட்டம் தர்க்கமேடையாக மாறியது.

இதன்போது கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச தாம் பிறக்கும்போதே ஐக்கிய தேசியக் கட்சி ஆளாகவே பிறந்ததாகவும் மக்கள் தலைவனாக தமக்கு தகுதி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஐந்தாம் திகதி அரசியல் கூட்டணி அமைக்கவுள்ள கட்சி அதற்குமுன்னர் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க வேண்டுமென சிலர் இன்று வற்புறுத்தியதால் அது தொடர்பில் ஆராய விசேட குழுவை நியமிக்கவுள்ளதாக ரணில் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் சபாநாயகர் கரு ஜெயசூரியவையும் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கலாமென சில எம் பிக்கள் இன்றைய கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் கடும் வாக்குவாதங்களின் பின்னர் எந்த முடிவுகளுமின்றி இன்றைய கூட்டம் முடிவடைந்தது. ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கட்சி தீர்மானிக்குவரை யாரும் இதைப்பற்றி பொதுவெளியில் பேசக் கூடாதென ரணில் இங்கு குறிப்பிட்டாரென சொல்லப்படுகிறது.

( இந்த செய்தியை மீள பதிவிடுவோர் செய்தியின் மூலமான எமது இணையத்தை குறிப்பிடவும் )