இலங்கை

ஜனாதிபதியிடம் கருத்துக்களை கேட்கத் தயாராகிறது பாராளுமன்ற தெரிவுக்குழு !

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கருத்துக்களையும் கேட்டறியத் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.

முன்னதாக தெரிவுக்குழுவில் சாட்சியங்களை வழங்கிய சிலர் ஜனாதிபதியின் பெயரை குறிப்பிட்டுக் கூறியதாலும் – தெரிவுக்குழுவின் உறுப்பினர்களை சந்திக்க ஜனாதிபதியும் விருப்பு வெளியிட்டுள்ள சூழ்நிலையிலும் – ஜனாதிபதியின் கருத்துக்களை கேட்டறிய தெரிவுக்குழு உத்தேசித்துள்ளது.

தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு ஜனாதிபதியை கேட்பது இப்போதுள்ள அரசியல் நிலையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என்பதாலும் – தெரிவுக்குழுவில் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஜனாதிபதிக்கு இல்லை என்பதாலும் – ஜனாதிபதி இருக்கும் இடத்திற்கு சென்று அவரின் கருத்துக்களை பெற யோசனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவுக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

தெரிவுக்குழு உறுப்பினர்களை சந்திக்க வேண்டுமென ஜனாதிபதி கூறியிருப்பதால் அவர் குறிப்பிடும் இடத்திற்கு சென்று அவரிடம் கருத்துக்களை பெற யோசிக்கப்பட்டுள்ள அதேசமயம் இது ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேசமயம் பாதுகாப்பு அதிகாரிகள் பலர் அடுத்தடுத்த வாரங்களில் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்படுவர்.மீண்டும் 18 ஆம் திகதி தெரிவுக்குழு கூடும்போது காத்தான்குடி பொலிஸ் நிலைய முன்னாள் – தற்போதைய பொறுப்பதிகாரிகள் சாட்சியமளிக்கவுள்ளனர்.அத்துடன் சூபி சமூக தலைவர் ஒருவரையும் சாட்சியம் வழங்க தெரிவுக்குழு அழைக்கவுள்ளது