இலங்கை

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கொழும்பு அரசியலில் திடீர் திருப்பங்கள் – ஒரு அலசல் !

 

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

இதற்காக பிரதமர் ரணில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார். அந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்தால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க தேவையான சர்வசன வாக்கெடுப்பு – அரசியலமைப்பு திருத்தம் என்பன நடக்கும் வாய்ப்புள்ளது.

சுதந்திரக் கட்சி – ஜே வீ பி – தமிழ்க் கூட்டமைப்பு – தமிழ் முற்போக்கு கூட்டணி , ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து இது விடயத்தில் செயற்பட்டால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இந்த விடயங்கள் அரங்கேறும் வாய்ப்புள்ளது.

அப்படியானால் இந்திய முறைப்படி பிரதமர் ஆட்சியே வரும் நிலை ஏற்படும் அதேவேளை ஜனாதிபதி தேர்தல் நடத்த வேண்டிய தேவை ஏற்படாதென விடயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

மறுபக்கம் தனது பதவிக்காலம் குறித்து உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை வினவும் மைத்திரியின் யோசனை இன்னமும் கிடப்பில் இருப்பதாகவும் அவர் எந்நேரமும் அதனை செய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அப்படி அவர் வினவி – 19 வது திருத்தத்திற்கு சபாநாயகர் கையொப்பம் வைத்த தினத்தில் இருந்தே அது அமுலாகும் என உயர்நீதிமன்றம் கூறினால் ஜனாதிபதியின் பதவிக்காலம் நீடிக்கும் நிலைமை வரலாம். அப்படியாயின் அந்த காலப்பகுதிக்குள் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் மைத்திரியின் கைகளுக்கு செல்லும்.ஜனவரி மாதமளவில் பாராளுமன்றத்தை மைத்ரி கலைக்கலாம்.

ஜனாதிபதி தேர்தல் நடக்குமா இல்லையா என்பது இந்த விடயங்களில் தங்கியுள்ளது.

இவை தொடர்பில் இரகசியப் பேச்சுக்கள் தற்போது நடந்து வருகின்றன.