இலங்கை

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் ஆதரவு வழங்கி நுவரெலியாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவேன் – முத்தையா பிரபு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தின்கீழ் நுவரெலியா மாவட்டத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவேன் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபு தெரிவித்துள்ளார்.

பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் இன்று (29) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது. மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன். ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் ஆதரவு வழங்கி நுவரெலியாவில் மாற்றத்தை ஏற்படுத்தவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன்.

இம்மாவட்டத்திலுள்ள பிரச்சினைகளை இன்று நாம் வெளிக்கொண்டு வந்துள்ளோம். வருமானமின்மை, கல்வித்துறையில் உள்ள பின்னடைவு என எல்லா விடயங்களையும் வெளிக்கொண்டு வந்துள்ளோம்.

இதுவரையில் அரசியல் மேடையில் பேசப்படாத பல விடயங்களை பேசியுள்ளோம். நாம் அவற்றை வெளிக்கொண்டுவந்த பின்னரே அவற்றை பற்றி மற்றவர்களும் இன்று கதைக்கின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் வருமானமின்மை பெரும் பிரச்சினையாக இருந்த போதிலும் அதனை அதிகரித்துக்கொள்வதற்கான திட்டங்கள் கடந்தகாலங்களில் உருவாக்கப்படவில்லை. தொழிற்சாலைகள் இல்லை, வேலைவாய்ப்புகள் என பல பிரச்சினைகள். முதலில் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதன்பின்னர் ஏனையவை நடக்கும் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.