இலங்கை

சென்னையில் இலங்கை யுவதி தற்கொலை செய்துகொண்ட பரிதாபம் !

இன்ஸ்டகிராம் செயலி மூலம் அறிமுகமான காதலரை சந்திக்க சென்னை சென்ற இலங்கைப் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தமிழக பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இலங்கையைச் சேர்ந்த மலர்மேரி (வயது – 22). காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்த அவினாஷ். ஆகியோருக்கிடையே இன்ஸ்டகிராம்செயலி ஊடாக நட்பு ஏற்பட்டு இருவரும் காதலர்களாக மாறியுள்ளனர். கடந்த 7 மாதங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து விமானம் மூலம் மலர்மேரி தனது காதலனை பார்க்க சென்னை சென்றுள்ளார். மலர்மேரியை அவரது காதலர் அவினாஷ் ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்தார்.

இந்தநிலையில் கடந்த 25–ந்தேதி மலர்மேரியை இலங்கைக்கு திருப்பி அனுப்ப காதலன் அவினாஷ் விமான டிக்கெட் எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் மலர்மேரி இலங்கை செல்ல மறுத்து விட்டதால் அவினாஷ் விடுதியில் காதலியை தங்க வைத்துவிட்டு நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்று விட்டார்.

இதனையடுத்து மலர்மேரி தங்கி இருந்த அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனையடுத்து ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது தூக்கில் மலர்மேரி பிணமாக தொங்கியிருந்தமை கண்டறியப்பட்டது. இந்த தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, இலங்கை பெண்ணின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்று காதலர் அவினாஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(நன்றி – இணையம் )