உலகம்

சூரியனின் கரோனா பகுதியை ஆய்வு செய்ய 2020ல் விண்கலம் அனுப்ப இஸ்ரோ திட்டம்

 

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக ரூ.978 கோடியில் உருவான இந்தியாவின் ‘சந்திரயான்-2’ விண்கலம் ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு புவி சுற்று வட்டப்பாதையை சென்றடைந்தது.

தொடர்ந்து 47 நாட்கள் பயணிக்கும் சந்திரயான்-2 விண்கலம், நிலவை சென்றடைந்த பின்னர், அதிலிருந்து நிலவில் தரையிறங்கும் விக்ரம் விண்கலம் பிரியும். விக்ரம் விண்கலம் நிலவில் தரையிறங்கிய நான்கு மணி நேரத்திற்கு பின்னர், அதிலிருந்து நிலவில் ஊர்ந்து சென்று ஆராயும். பிரக்யான் விண்கலம், நிலவில் இறங்கி ஆராயும் பணியை தொடங்கும். விக்ரம், பிரக்யான் விண்கலங்கள் 14 நாட்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டு தகவல்களை இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும். இதே நேரத்தில் சந்திரயான்-2 விண்கலம் ஓராண்டு காலம் நிலவை சுற்றி, சுற்றி வந்து ஆய்வில் ஈடுபடும்.

இந்த ஆய்வின் மூலம் நிலவின் தென்துருவத்தில் தண்ணீர் உள்ளதா, வேறு என்னென்ன கனிமங்கள் உள்ளன. நிலவின் தட்பவெப்பம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் திரட்டப்பட உள்ளன.

இஸ்ரோ அமைப்பின் தலைவர் சிவன் கடந்த மாதத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ‘சந்திரயான்-2’ விண்கலம் பற்றி கூறும்பொழுது, நிலவின் தென்பகுதி பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. பருவகால மாற்றத்தில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்த கூடிய இது சூரியனை நோக்கியே காணப்படுகிறது. கரோனாவை பற்றிய பகுப்பாய்வை இந்த திட்டம் வழங்கும் என கூறினார்.

இதேபோன்று அடுத்த 2 முதல் 3 வருடங்களில் வெள்ளி கிரகம் பற்றி ஆய்வு செய்வதற்கான திட்டமும் செயல்படுத்தப்படும் என கூறினார்.

இந்நிலையில், சூரியனின் கரோனாவை பற்றி ஆய்வு செய்வதற்காக வருகிற 2020ம் ஆண்டின் முதல் பாதியில் ஆதித்யா-எல்1 என்ற விண்கலத்தினை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

சூரியனின் வெளிப்புற அடுக்குகள் கரோனா என அழைக்கப்படுகிறது. சூரியனை சூழ்ந்து பல ஆயிரக்கணக்கான கி.மீட்டர் தொலைவுக்கு இது நீண்டு அமைந்துள்ளது. சூரிய இயற்பியலில், இந்த கரோனா பகுதி எப்படி அதிக அளவு வெப்பத்தினை பெறுகிறது என்பது இன்றளவும் விடை கிடைக்காத கேள்வியாக உள்ளது என இஸ்ரோ தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளது.

இந்த ஆதித்யா-எல்1 விண்கலம் சூரியனின் 3 அடுக்குகளான போட்டோஸ்பியர், குரோமோஸ்பியர் மற்றும் கரோனா ஆகிய பகுதிகளை பற்றி ஆய்வு மேற்கொள்ளும். சூரியனில் இருந்து வெளிவரும் துகள்களை பற்றிய ஆராய்ச்சி பணிகளிலும் இந்த விண்கலம் ஈடுபடும்.