Breaking News

சுவிஸ் பணியாளர் விவகாரம் – சட்ட மா அதிபரின் ஆலோசனையை கோருகிறது சி ஐ டி !

வாகனம் ஒன்றில் கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரகப் பணியாளர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் அந்த விவகாரம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க சட்ட மா அதிபரின் ஆலோசனையை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தொழிநுட்ப சாட்சியங்களின் அடிப்படையில் பெறப்பட்ட தகவல்களை கொண்டு அந்த பணியாளர் விடயத்தில் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையை பெற முயற்சிகளை எடுத்துள்ளதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டன.

போலியான தகவல்களை வழங்கி பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர தரப்புக்களை தவறாக வழிநடத்தி இருந்தால்,சம்பந்தப்பட்ட பணியாளருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ,அப்படி தவறான அல்லது சோடிக்கப்பட்ட சம்பவமாக அது இருந்தால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் சிறைத்தண்டனையை கூட அனுபவிக்க நேரிடலாமென அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.