Breaking News

சுவிஸ் தூதரக பணியாளரை விசாரிக்க நீதிமன்ற அனுமதியை கோர முஸ்தீபு !

 

அச்சுறுத்தலுக்கு உள்ளானதாக சொல்லப்படும் இலங்கைக்கான சுவிற்சலாந்து தூதரகத்தின் பணியாளர் இதுவரை சம்பவம் குறித்து சாட்சியமளிக்க முன்வராத நிலையில், நீதிமன்ற அனுமதியை பெற்று அவரிடம் விசாரணை நடத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

சுவிஸ் தூதரகம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சம்பவம் நடந்த தினத்தில் வீதியோர சி சி ரி வி கமராக்களை பரிசீலனைக்குட்படுத்திய பொலிஸார் ,சுவிஸ் தூதரக பணியாளர் வாடகை வாகனம் போன்ற ஒன்றில் ஏறி பம்பலப்பிட்டி வரை பயணித்துள்ளதாக கண்டறிந்துள்ளனர்.

தூதரக பணியாளரின் வீடு மருதானை பகுதியில் இருப்பதால் அவர் பம்பலப்பிட்டிக்கு தனிப்பட்ட தேவைக்காக சென்றாரா அல்லது தனிப்பட்ட பிரச்சினையால் ஏற்பட்ட சம்பவமா இது என்பது குறித்து பல கோணங்களில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

பணியாளரை வாக்குமூலம் வழங்க தூதரகம் அனுமதி மறுப்பதால் நீதிமன்ற உத்தரவை ஒன்றை பெற்று அவரிடம் விசாரணை நடத்த யோசனை செய்யப்பட்டுள்ளது.உள்ளூர் பணியாளர் என்பதால் இராஜதந்திர சிறப்புரிமைகளை தாண்டி நீதிமன்ற அனுமதியுடன் அவரிடம் வாக்குமூலம் பெறலாமென பாதுகாப்புத் தரப்பில் கருதப்படுகிறது. உடல் ரீதியாக அவர் துன்புறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதால் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடந்த விசாரணைகள் குறித்து விரிவான விபரங்களை பாதுகாப்புத் துறை வெளியிடத் தயாராகி வருவதாகவும் மேலும் அறிய முடிந்தது.