உஷ்... இது இரகசியம் !

சுதந்திர தின நிகழ்வில் சந்திரிகா மஹிந்தவிடம் செய்த முறைப்பாடு !

 

தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் நீண்ட நேரம் அளவளாவியமை குறித்து அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

அப்படி என்னதான் சந்திரிகா மஹிந்தவுடன் பேசினார் என்று தேடிப்பார்த்ததில் கிடைத்த தகவல் இது.

இம்முறை தேசிய சுதந்திர தின விழா அழைப்பிதழ்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்ரி மற்றும் சந்திரிகா ஆகியோருக்கும் முன்னாள் பிரதமர் ரணிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.மைத்திரியும் ரணிலும் இந்த நிகழ்வுக்கு தங்களால் வரமுடியாதென முன்னதாகவே கடிதம் மூலம் ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்துவிட்டனர். ஆனால் சந்திரிக்கா அம்மையார் வருகை தந்தாலும் தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து அவர் அதிருப்தியுடன் பேசியதாக தகவல்.

தமக்கு அனுப்பட்ட அழைப்பிதழில் தமது பெயரோ அல்லது பதவிநிலையோ எதுவும் குறிப்பிடப்படவில்லையென்றும் ஏற்பாட்டாளர்கள் இதனை பொறுப்புடன் செய்திருக்க வேண்டுமென்றும் சந்திரிகா ஆதங்கத்துடன் மஹிந்தவிடம் குறிப்பிட்டுள்ளார்.

அந்த விடயத்தை ஆர்வமாகக் கேட்ட மஹிந்த,அழைப்பிதழ் இறுதிநேரத்தில் அச்சிடப்பட்டு வந்திருந்தோ அல்லது தொழிநுட்ப காரணங்களினாலோ அப்படி ஒரு தவறு நடந்திருக்கலாமென்றும் எவ்வாறாயினும் இது குறித்து ஏற்பாட்டாளர்களை அழைத்து கேட்கப்போவதாகவும் சந்திரிகாவிடம் உறுதியளித்துள்ளார்.

”இல்லை இல்லை இதை பெரிய பிரச்சினையாக்க வேண்டாம்.அவர்கள் இதனை உணர்ந்து எதிர்காலத்தில் இப்படியான தவறை செய்யாமலிருந்தால் சரி ..” என்று சந்திரிகா மஹிந்தவிடம் கூறியதாக அறியமுடிந்தது.