இலங்கை

சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பான வர்த்தமானியை வௌியிட அரசாங்கம் தாமதிக்கின்றது – கஃபே

கொரோனா தொற்று நெருக்கடியில் போதுத் தேர்தல்களை நடத்துவதற்கான சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பான வர்த்தமானியை வெளியிடுவதற்கு அரசாங்கம் தாமதிக்கின்றது என தந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கத்தின் (கஃபே) நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வழிகாட்டுதல்கள் வெளியிடப்படாமை கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்தச் சூழலில், அது தொடர்பாக நேற்று (12) வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பான வர்ததமானியை வௌியிடுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் சுகாதார நெருக்கடி ஏற்படக்கூடும். நிச்சயமாக வாக்காளர்களின் எண்ணிக்கையை இது பாதிக்கும்.

வழிகாட்டுதல்களை வெளியிடுவது மாத்திரம் போதாது. அரசாங்கம் அவற்றை வர்த்தமானியில் வெளியிடச் செய்ய வேண்டும். எனவே அதிகாரிகள் அவற்றைச் செயற்படுத்த முடியும். இந்த வழிகாட்டுதல்களை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் பிரசாரத்தின் போது யாரும் அவற்றைப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை.

தற்போது நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதார நடைமுறைகள் தொடர்பான வழிகாட்டுதல்களை உடனடியாக வர்த்தமானியில் வெளியிடுவது அவசியமாகும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.