உலகம்

சீன ஜனாதிபதிக்கு சென்னையில் பிரமாண்ட வரவேற்பு – உச்சக் கட்ட பாதுகாப்பு

 

சென்னை வந்த சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், தனி விமானம் மூலம், பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். அங்கு, அவருக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், ஜின்பிங்கை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., உள்ளிட்டோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

விமான நிலையத்தில் , ஜின்பிங்கை வரவேற்று, மேளதாளம், செண்டை மேளங்கள் இசை நிகழ்ச்சிகளுடன், மயிலாட்டம், ஒயிலாட்டம் கலைஞர்கள் நிகழ்ச்சியும் இடம்பெற்றது. இதன் பின்னர், கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலுக்கு சென்றார்.சென்னையில் இன்று உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உலகில் அதிக மக்கள் தொகையை கொண்ட நாடாக சீனாவும், அதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவும் உள்ளன.

அண்டை நாடுகளாக விளங்கும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லை தகராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ள போதிலும், பரஸ்பர நல்லுறவும், வர்த்தக, கலாசார தொடர்புகளும் இருந்து வருகின்றன. சீனாவுடன் நல்லுறவை பேணுவதில் பிரதமர் மோடி மிகுந்த ஆர்வம் காட்டுகிறார். இதேபோல் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த விரும்புகிறார். இது தொடர்பாக இரு தலைவர்களும் ஏற்கனவே சிலமுறை சந்தித்து பேசி இருக்கிறார்கள்.