இலங்கை

சீன கொம்யுனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான Chen Min’er  ஜனாதிபதியை சந்தித்தார்…..

இலங்கைக்கு சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள சீன கொம்யுனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான Chen Min’erக்கும்  ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவுக்குமிடையிலான  சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இரு நாட்டு தொடர்புகள் மற்றும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை தொடர்பில் தீர்க்கமாக கலந்துரையாடப்பட்டது.
60 ஆண்டு காலமாக சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி , யுத்த காலத்தில் சீனா இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பை இலங்கை ஒருபோதும் மறவாது என்றும் தெரிவித்தார்.
ஆதிகாலம் முதல் சீனாவுக்கும் இலங்கைக்குமிடையிலான நெருங்கிய தொடர்புகளை நினைவூட்டிய Chen Min’er இரு நாடுகளுக்குமிடையே தூதரக  தொடர்புகள் ஆரம்பிப்பதற்கு முன்னர், அதாவது 1950 அளவில் இறப்பர் மற்றும் அரிசி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டதன் ஊடாக சிறந்த நட்பு நாடு என்ற வகையில் இலங்கை சீனாவுக்கு சர்வதேச அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இலங்கையில் “ஒரே சீனா” கொள்கையினூடாக தனது நாட்டுக்கு சர்வதேச ரீதியில் வழங்கப்பட்ட ஒத்துழைப்பையும் அவர் நினைவுகூர்ந்தார்.
வறுமையை ஒழிக்கும் நிபுணராக பிரசித்திபெற்ற Chen Min’er  அவர்கள், சீனாவின் வறுமையை ஒழிப்பதற்கு முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,  வறுமையில் வாடும் கிராமிய மக்களை வலுவூட்டுவதன் ஊடாக வறுமையை ஒழிக்கும் வேலைத்திட்டங்கள் வெற்றியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்  அதிகாரிகளுக்கு இலக்குகளை வழங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், அதனால் இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னோக்கி செல்வதாகவும் தெரிவித்தார்.
சீன கொம்யுனிஸ்ட் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கிடையிலான உறவுகளை வலுவூட்டுவதன் தேவையை ஜனாதிபதி  வலியுறுத்தினார்.
மேலும் இங்கு கருத்து தெரிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, பண்டாரநாயக்க  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நிறுவும்போது நடுநிலை கொள்கையையும் சீன தேசத்தின் பெருந் தலைவர் மாவோ சேதுங் கொள்கைகளையும் ஒன்றிணைத்து கட்சியை வடிவமைத்ததாகவும் தெரிவித்தார். இந்த சமூக ரீதியான கொள்கையை இலங்கை மக்களுக்கு உகந்தவாறு பண்டாரநாயக்க  வடிவமைத்ததாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் மக்கள் நம்பிக்கை வைத்ததற்கு அதுவே காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.
சீன கொம்யுனிஸ்ட் கட்சியின் அடுத்த ஆண்டு விழாவில் கலந்துகொள்ளுமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் குழுவிற்கு Chen Min’er  அழைப்பு விடுத்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, மஹிந்த அமரவீர, திலங்க சுமதிபால மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்ன, இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.