உலகம்

சீனாவின் ஆக்ரோஷமான செயல்களுக்கு எதிராக இந்தியா சிறப்பாகவே செயற்பட்டுள்ளது – மைக் பொம்பியோ

சீனாவின் ஆக்ரோஷமான செயல்களுக்கு எதிராக இந்தியா சிறப்பாகவே செயற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய மைக் பொம்பியோ, “சீனாவின் அத்துமீறல்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் நான் பலமுறை பேசியுள்ளேன்.

சீனா நம்ப முடியாத அளவில் ஆக்ரோஷமான நடவடிக்கையை எடுத்தது. இந்தியாவும் சிறப்பாக செயற்பட்டு தக்க பதிலடி கொடுத்தது. சீனா பல இடங்களில் பிரச்சினை செய்து வருகிறது. உலகம் இதனை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதனைத் தொடர அனுமதிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லை பிரச்சினை, தொடர்கதையாய் நீண்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த மே மாதம் முதல் வாரம், இரு தரப்பு வீரர்கள் கிழக்கு லடாக் எல்லை பகுதியில் மோதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் அதிகரித்தது.

அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 15ஆம் திகதி அங்கு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீற முயன்ற சீன துருப்புகளுக்கும், இந்திய இராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 துருப்புகள் பலியானதாக அமெரிக்க உளவு அறிக்கை கூறுகிறது.

இந்த மோதலைத் தொடர்ந்து கிழக்கு லடாக் பகுதியில் இரு தரப்பும் படைகளை குவிக்க, பதற்றம் மேலும் அதிகரித்தது. இந்திய இராணுவத் தளபதி நரவானே லடாக் சென்று, கள நிலவரத்தை நேரில் ஆய்வு செய்தார். எல்லையில் பதற்றத்தை தணிப்பதற்காக இரு தரப்பினரும் கடந்த சில வாரங்களாக பல சுற்றுகளாக ராஜதந்திர ரீதியிலும், ராணுவ ரீதியிலும் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

அந்த வகையில் கடந்த மாதம் 22ஆம் திகதி நடந்த பேச்சுவார்த்தையில், கிழக்கு லடாக்கில் மோதல் நடந்த பகுதியில் இருந்து படைகளை விலக்கிக்கொள்வது என இரு தரப்பும் ஒருமித்த கருத்துக்கு வந்தனர். தொடர்ந்து 30ஆம் திகதி இராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பு மோதலை முடித்துக்கொண்டு, எல்லையில் இருந்து படைகளை விரைவில் திரும்பப்பெறவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் பிரதமர் மோடி சற்றும் எதிர்பாராத வகையில் அதிரடியாக கடந்த 3ஆம் திகதி லடாக் எல்லைக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு கள நிலவரத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் இராணுவ வீரர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், “ ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டது, ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் செயல்பட்டவர்கள் தோல்வியை சந்தித்திருக்கிறார்கள் அல்லது அழிந்திருக்கிறார்கள், அதற்கு சரித்திரம் சான்றாக அமைந்திருக்கிறது” என குறிப்பிட்டார். இது இந்தியா பின்வாங்கப்போவதில்லை, நிலைமையை உறுதியாக கையாளும் என்ற தெளிவான செய்தியை சீனாவுக்கு சொல்லாமல் சொல்லியது.

அதன் தொடர் நிகழ்வாக 5ஆம் திகதி, எல்லை பிரச்சினையில் இரு தரப்பு சிறப்பு பிரதிநிதிகளாக உள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் தோவலும், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியும் 2 மணி நேரம் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் நடந்தது.

இதில் இரு தரப்பும் எல்லையில் சமாதானத்தையும், அமைதியையும் திரும்பக்கொண்டு வருவதற்கு உதவும் வகையில் அனைத்து நிலைகளில் இருந்தும் இரு தரப்பு படைகளையும் விரைவாக திரும்பப்பெறுவது என ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி மறுநாளே (06) இரு தரப்பும் கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட்ஸ்பிரிங்ஸ், கோக்ரா, பிங்கர் பகுதிகளில் இருந்து பரஸ்பரம் படைகளை விலக்கிக்கொள்ளும் நடவடிக்கை தொடங்கியது.