Breaking News

‛சீனாவிடம் கேள்வியை கேளுங்கள் : பெண் செய்தியாளருடன் ட்ரம்ப் வாக்குவாதம்

 

கொரோனா பாதிப்பு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் செய்தியாளருடன் சர்ச்சைக்குரிய வகையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பாதியிலேயே புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா பாதிப்பு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டட்ரம்ப் தினமும் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து கேள்விகளுக்கு பதிலளிப்பார். நேற்று நடந்த சந்திப்பின் போது, ”யார் பரிசோதனை செய்து கொள்ள விரும்பினாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம். கொரோனா தொற்றால் உயிரிழப்பு கணிசமான அளவிற்கு குறைந்து வருகிறது” என ட்ரம்ப் தெரிவித்தார்.

அப்போது கொரோனா வைரஸ் பரிசோதனை அளவிற்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து சி.பி.எஸ் நியூஸ் அலைவரிசை செய்தியாளர் வெய்ஜியா ஜியாங், ‛அன்றாடம் அமெரிக்கர்கள் இன்னும் தங்கள் உயிரை இழந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு நாளும் அதிகமான பாதிப்புகளை நாங்கள் காண்கிறோம். உங்களுக்கு ஏன் இது உலகளாவிய போட்டியாக தெரிகிறது?,‛ என கேள்வி எழுப்பினார்.

சீனாவில் பிறந்து தனக்கு 2 வயதான போது, குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறியவரான ஜியாங், 2015 முதல் சி.பி.எஸ் நியூஸ் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இதற்கு பதிலளித்த ட்ரம்ப், ‛உலகில் எல்லா இடங்களிலும் மக்கள் தங்கள் உயிரை இழக்கிறார்கள். நீங்கள் சீனாவிடம் கேட்க வேண்டிய கேள்வி இது. என்னிடம் கேட்க வேண்டாம். சீனாவிடம் அந்த கேள்வியைக் கேளுங்கள்’ என்றார். வேறு ஏதேனும் கேள்வி உள்ளதா என பத்திரிகையாளர்களை நோக்கி ட்ரம்ப் கேட்டார். ‛சார், நீங்கள் ஏன் என்னிடம், குறிப்பாக இதைச் சொல்கிறீர்கள்?,’ என ஜியாங் மறுபடியும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, ‛மோசமான கேள்வி கேட்கும் எவருக்கும் அவ்வாறு தான் கூறுவேன்,’ என்று ட்ரம்ப் கூறினார். ‛இது ஒரு மோசமான கேள்வி அல்ல,’ என ஜியாங் கூறினார். வேறு கேள்விகள் இருக்கிறதா என ட்ரம்ப் கேட்க, ஜியாங் அருகில் நின்று கொண்டிருந்த சி.என்.என் நிருபர் கொலின்ஸ், கையை உயர்த்தினார். ‛நீங்கள் என்னிடம் சுட்டிக்காட்டினீர்கள்’ என கொலின்ஸ் கேள்வி எழுப்பினார். ‛நான் உங்களிடம் சுட்டிக்காட்டினேன், நீங்கள் பதிலளிக்கவில்லை,’ என ட்ரம்ப் தெரிவித்தார். ஜியாங் தன்னுடைய கேள்வியை முடிக்க காத்திருந்ததாகவும், இப்போது கேள்வி கேட்கலாமா எனவும் கொலின்ஸ் வினவினார். உடனே ட்ரம்ப், ‛பத்திரிகையாளர் சந்திப்பை முடித்து கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி’ என சொல்லிவிட்டு ரோஸ் கார்டனை விட்டு புறப்பட்டு சென்றார்.