உலகம்

சிரிய போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் – உலக நாடுகளுக்கு பிரான்சும் ஜேர்மனியும் கூட்டாக அழைப்பு சிரியாவில் உள்ள  குர்திஸ் பிராந்தியத்தில் துருக்கி மேற்கொண்டுவரும் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உடனடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென உலக நாடுகளுக்கு பிரான்சும் ஜேர்மனியும் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

பிரான்ஸ் தலைநகர் பரிசில் அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மக்ரனுக்கும், ஜேர்மன்  ஜனாதிபதி ஏங்கலா மேர்க்கலுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துருக்கி நடத்திவரும் தாக்குதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென்பதே தமது பொதுவான விருப்பம் என இருநாட்டு அரச தலைவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

சிரிய – துருக்கி எல்லையில் உள்ள  குர்திஸ் பிராந்தியத்தில் இருந்து அமெரிக்கப் படைகளை பின்வாங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி, கட்டளையிட்டதை அடுத்து ஆரம்பமான தாக்குதல் ஆறாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

துருக்கிய படையினரின் இராணுவ நடவடிக்கை காரணமாக சிரியாவின் வட பிராந்தியத்தில் இருந்து இதுவரை ஒரு இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அந்த பிராந்தியத்திலிருந்து வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

குர்திஸ் போராளிகளை பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தி வரும் துருக்கிய அரசு, அவர்களை தமது எல்லைப் பகுதியிலிருந்து அகற்றும் நோக்கிலேயே பாரிய படை நடவடிக்கையை முன்னெடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.