இலங்கை

சிட்டுவேஷன் ரிப்போர்ட் – குண்டுவெடிப்புகளால் அதிர்ந்த கொழும்பு – அதிரடி விசாரணைகள் ஆரம்பம் !

இன்று காலை நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்துள்ளது.
3 தேவாலயங்கள் மற்றும் 4 ஹோட்டல்களில் குண்டுகள் வெடித்தன. தெமட்டகொட வீட்டிலும் வெடிப்புச் சம்பவம் நடந்தது.39 வெளிநாட்டவர்கள் பலியாகினர்.450 பேர் காயமடைந்துள்ளனர். 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்தனர்.
தெமட்டகொட வீட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஒரு பெண் மற்றும் இரு பிள்ளைகளின் உடல்கள் இன்று மாலை மீட்கப்பட்டன.

காலவரையற்ற பொலிஸ் ஊரடங்கு அமுலில் உள்ளது. ஊரடங்கு சட்டம் குறித்து காலை அரசு அறிவிப்பை வெளியிடும் .கொழும்பு பங்குச்சந்தை நாளை மூடப்படும். பரீட்சைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகள் இரண்டு நாட்களுக்கு மூடப்படவுள்ளன. அனைத்து பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன.அரச மற்றும் தனியார் துறையினருக்கும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை

இன்று தீவிர விசாரணைகளை நடத்திவரும் பொலிஸ் , செய்தியாளர்கள் சிலரை ஷங்ரி லா ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது.

616 ஆம் இலக்க அறையில் தங்கியிருந்த இரண்டு சந்தேக நபர்கள் சி 4 ரக குண்டை எடுத்துக் கொண்டு மூன்றாம் மாடியில் உள்ள உணவகத்திற்கு வந்து ஒருவர் அதனை வெடிக்கச் செய்ததாகவும் மக்கள் அங்குமிங்கும் சிதறி ஓடும்போது மற்றவர் மற்றதை லிப்டுக்கருகில் வெடிக்கச் செய்ததாகவும் சி சி ரி வி ஆதாரத்தை வைத்து செய்தியாளர்களிடம் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருந்த அறையில் கொத்து ரொட்டி பார்சல் ஒன்று இருந்துள்ளது. அல் குரான் புனித நூல் ஒன்றும் இருந்துள்ளது. இவர்கள் வெளிநாட்டு பிரஜைகளா என்பதை ஆராயும் பொலிஸ் முழு விபரங்களை சேகரித்து வருகிறது.

குண்டுகளை கொண்டுவர பயன்படுத்தப்பட்ட வேன் புறப்பட்ட பாணந்துறை வீட்டில் இருந்து தற்கொலை அங்கிகள் மீட்கப்பட்டதாகவும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருள் ஒன்று விமானப்படையினரால் செயலிழக்க செய்யப்பட்டது. பிளாஸ்ரிக் பைப் ஒன்றில் இந்த குண்டு பொருத்தப்பட்ட நிலையில் இருந்தது.

இன்று மாலை தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் உறவினர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். நவ்பர் என்பவர் ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

எவரும் தப்பிச் செல்லக் கூடாதென கடற்பகுதி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் சோதனைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

பிரதமர் ரணிலை சந்தித்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இந்த சம்பவங்கள் குறித்து முழு விசாரணை நடத்தி சந்தேக நபர்களை கைது செய்ய வலியுறுத்தியுள்ளனர். சம்பந்தன் ,சுமந்திரன் ஆகியோருடனும் ரணில் பேச்சு நடத்தினார்.மஹிந்தவுடனும் ரணில் நீண்ட பேச்சுக்களை நடத்தினார் .

ஜனாதிபதி மைத்ரி இன்றிரவு நாடு திரும்புகிறார். பாராளுமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் நாளை நடைபெறும். நாளை மறுதினம் பாராளுமன்றம் கூடும்.
நாளை தேசிய பாதுகாப்பு சபை மறறும் அமைச்சரவை கூட்டங்களை ஜனாதிபதி நடத்தவுள்ளார்.

முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மீது சில இடங்களில் தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் குறித்து வந்த எச்சரிக்கைகளை அசட்டை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கையென பிரதமர் அறிவித்துள்ளார்