இலங்கை

சாய்ந்தமருது குண்டுத்தாக்குதலுக்குள்ளான வீட்டின் அருகே ஊடகவியலாளர்கள் பிரசன்னம் – வெளிநாட்டு பிரமுகர்கள் தடுமாறி ஓட்டம்

 

உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் சேதமடைந்த வீட்டினை பார்வையிடுவதற்காக வெளிநாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் வாகனம் ஒன்றில் அழைத்துவரப்பட்ட நிலையில் அவ்விடத்தில் ஊடகவியலாளர்களின் திடீர் பிரசன்னத்தினால் திரும்பிச்சென்றனர்.

செவ்வாய்க்கிழமை ( 13) காலை புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸாரின் தீவிர கண்காணிப்பில் தாக்குதலுக்குள்ளான வீடு காணப்பட்ட நிலையில் அதை பார்வையிடுவதற்காக அம்பாறை தடயவியல் பொலிஸார் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சகிதம் வெள்ளை நிற வாகனம் (DP-CBE- 5745) ஒன்றில் வருகை தந்தனர்.

இவ்வாறு வந்தவர்கள் குறித்த தாக்குதலின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் தீவிரவாதி ஸஹ்ரானின் பயிற்சி தளங்கள் தாக்குதலுக்குள்ளான சில இடங்களை பார்வையிட்ட பின்னர் சாய்ந்தமருதுவில் உள்ள குறித்த தாக்குதலுக்குள்ளான வீட்டை இறுதியாக பார்வையிட வந்திருந்தனர்.

எனினும் குறித்த தாக்குதலுக்குள்ளான வீட்டை பார்வையிடுவதற்காக வருவதை அறிந்த ஊடகவியலாளர்கள் புகைப்படங்கள் எடுக்க சென்ற போதிலும் குறித்த வீட்டிற்கு அருகே அவ் வாகனத்தில் வந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் ஊடகவியலாளர்களை கண்டு திரும்பி சென்றனர்.

அண்மைக்காலமாக இத்தாக்குதலுக்குள்ளான வீட்டை இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட தரபபினர் அடிக்கடி சென்று பார்வையிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

எனினும் தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்த வீட்டினை பார்வையிடாமல் சென்றவர்கள் எந்த நாட்டு பிரதிநிதிகள் என தெரியவில்லை .எதற்காக பார்வையிடாமல் திரும்பி சென்றனர் என்பது வீண் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தின் இராணுவ பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகள் குண்டுத்தாக்குதலுக்குள்ளான வீட்டை கண்காட்சி பொருளாக வெளிமாவட்டத்தில் உள்ள மக்களுக்கு கூட்டிச்சென்று காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீட்டை இவ்வாறு இராணுவத்தினர் சென்று பார்ப்பது தொடர்பாக அருகில் உள்ள மக்கள் அச்சம் தெரிவித்து வருவதுடன் சில இராணுவத்தினர் இவ்வாறு குறித்த வீட்டை பார்ப்பதன் நோக்கம் அதை புனரமைத்து கொடுப்பதற்காக உதவிகளை பெற நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறி சென்றுள்ளனர்.

-பாறுக் ஷிஹான்-