Breaking News

“ சஹ்ரான் இல்லை என்பதில் மகிழ்ச்சி – நிம்மதியாக செயற்படலாம் ” – ஹிஸ்புல்லாஹ் பரபரப்பு சாட்சியம்

“சஹ்ரான் இப்போது இல்லை என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.அடுத்த தேர்தல் காலங்களில் எனக்கு தொல்லை இருக்காது.எதிர்ப்பின்றி நான் செயற்படலாம்”

இவ்வாறு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா சாட்சியளிக்கும்போது தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது ,

“உலகில் முஸ்லிம்கள் பெரும்பான்மை என்பதை நான் கூறினேன். அச்சத்திலுள்ள முஸ்லிம்களை உற்சாகப்படுத்துவதற்காகவே அந்த கருத்தை நான் வெளியிட்டேன் .2015ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சஹ்ரான் என்னை தோற்கடித்தார்.எல்லா அரசியல் தலைவர்களை போல நான் சஹ்ரானை சந்தித்திருக்கிறேன்.அப்போது அவர் மத போதனைகளில் ஈடுபட்டு அவரின் உரையால் பல இளைஞர்களை கவர்ந்திருந்தார். பின்னர் அவர் என்னையும் எனது குடும்பத்தினரையும் பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்தார். இப்போது அவர் ஒரு பயங்கரவாதி.ஆனால் அவர் அப்போது அப்படி இருக்கவில்லை.

2017 வரை அவர் ஒரு மதத் தலைவராகவே கருதப்பட்டார். அதன் பின்னர் அவர் ஐ எஸ் இயக்கத்துடன் தொடர்புகளை கொண்டிருக்கக் கூடும். சஹ்ரான் இஸ்லாம் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்து சர்சைக்குரியவராக இருந்தபோதும் அவரின் கூட்டங்களுக்கு – ஒலிபெருக்கி அனுமதியை பொலிஸார் வழங்கியிருந்தனர்.

2017 ற்கு பின்னர் சஹ்ரானோ அவரது சகாக்களோ காத்தான்குடியில் இருக்கவில்லை.அவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்களா என்பது எனக்கு தெரியாது. சஹ்ரான் இப்போது இல்லை என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.அடுத்த தேர்தல் காலங்களில் எனக்கு தொல்லை இருக்காது.எதிர்ப்பின்றி நான் செயற்படலாம்.

காத்தான்குடியில் அரபு மொழிகளில் பெயர்ப்பலகைகள் இருப்பது அரபு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை கவரவே. அரபு மொழி பெயர்ப்பலகைகள் இடக் கூடாது என்று சட்டம் இல்லை.

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான்.கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்லீம் மக்கள் விரும்பவில்லை.முஸ்லிம் மக்கள் தான் ஆயுதம் ஏந்துவார்கள் என்று கூறினேன் .( பொறுப்புள்ள முஸ்லிம் அரசியல் தலைவர் ஒருவர் இவ்வாறு கூறலாமா என்று தெரிவுக்குழு உறுப்பினர் ஒருவர் இந்த சந்தர்ப்பத்தில் கேட்டபோது ஹிஸ்புல்லாஹ் மௌனம் சாதித்தார் )

அந்தப்பகுதியில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் பல உறுப்பினர்கள் சஹ்ரானுடன் தொடர்பில் இருந்தனர். நான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டபோது சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை தோற்கடித்தனர்.

– என்றார் ஹிஸ்புல்லாஹ்.

( இப்போது தேநீர் இடைவேளை விடப்பட்டுள்ளது. அதன் பின்னர் சாட்சியம் தொடரும் )

தேநீர் இடைவேளையில் ஹக்கீமும் ஹிஸ்புல்லாஹ்வும் உரையாடுகின்றனர்