Breaking News

சர்வதேச கிரிக்கெட் பேரவையால் விசேட பரிந்துரைகள் – பந்தில் எச்சில் துப்பவும் முடியாது !

 

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளின் போதும் இதுவரை பின்பற்றப்பட்ட பல நடைமுறைகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மறுசீரமைக்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளதென ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் குழுவினால் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் கூறுகின்றது.

பந்து வீசுவதற்கு முன்னர் பந்தில் எச்சில் துப்புவது மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளமை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் பிரதானமான ஒன்று என தெரிவிக்கப்படுகின்றது.

கிரிக்கெட் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் ஆராய்ந்த சர்வதேச கிரிக்கெட் பேரவை, நிறைவேற்று அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர்.

கிரிக்கெட் சட்டத்தின் பிரகாரம், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியொன்றில் ஏதோ ஒரு வகையில் வீரர் ஒருவர் உபாதைக்கோ அல்லது திடீர் சுகயீனத்திற்கு உள்ளாவாராயின், அவருக்கு பதிலாக அணிக்குள் வேறொரு வீரரை உள்வாங்க முடியாது.

எனினும், அணிக்குள் உள்வாங்கப்படும் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமைக்கான அறிகுறிகள் காணப்படுமாக இருந்தால் அவர் அணியிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டு, அவருக்கு பதிலாக வேறொரு வீரரை உள்வாங்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் கூறுகின்றது.

இந்த தீர்மானம், குறித்த கிரிக்கெட் போட்டியின் தீர்மானத்தை வழங்கும் நபரின் அனுமதிக்கு அமையவே வழங்கப்பட வேண்டும் என்பதுடன், அந்த நடைமுறை இருபதுக்கு இருபது மற்றும் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அனில் கும்பிளேயின் தலைமையிலான கிரிக்கெட் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, எதிர்வரும் காலங்களில் பந்துகளுக்கு எச்சில் துப்புவது தடை செய்யப்பட்டுள்ள போதிலும், தமது வியர்வையை பந்துக்கு பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பந்தில் மீது எச்சில் துப்புவது கண்டறியப்படுமாக இருந்தால், குறித்த வீரருக்கு தண்டனையாக 5 புள்ளிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் கூறுகின்றது.

பந்தின் மீது தொடர்ச்சியாக எச்சில் துப்புவதை அவதானித்தல் இரண்டு முறை எச்சரிக்கை விடுக்கப்படும் அதேவேளை, அந்த செயற்பாடு மேலும் தொடருமாக இருந்தால் துடுப்பெடுத்தாடும் அணிக்கு மேலதிக 5 புள்ளிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் போட்டிகள் தொடருமாக இருந்தால், குறித்த பந்தை சுத்திகரித்தல் அத்தியாவசியமான விடயம் என கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த நடைமுறைக்கு வீரர்கள் பழக்கப்படும் வரை அந்த நடைமுறையை குறைந்த மட்டத்தில் செயற்படுத்த கிரிக்கெட் நடுவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆலோசனை வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தடைப்பட்டுள்ள கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்காக தற்காலிகமாக சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் எடுக்கப்பட்டுள்ளதாக தீர்மானங்கள் இவை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவிக்கின்றது.