Breaking News

“சரியானதை செய்ய முடியாத அரச அதிகாரி நாட்டுக்குச் சுமை – ஜனாதிபதி !

“சரியானதை செய்ய முடியாத அரச அதிகாரி நாட்டுக்கு ஒரு சுமை. அரச அதிகாரிகளின் பொறுப்பு பிரச்சினையை தீர்ப்பதன்றி அதிலிருந்து விலகிக்கொள்வதல்ல..”

அமைச்சுக்களின் செயலாளர்கள், மற்றும் பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் துறைக்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது ,

அரசாங்கத்தின் பாரிய பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்வதற்கான கொள்கைகள் நாட்டின் முன் வைக்கப்பட்டுள்ளதால் அவற்றை அடைந்து கொள்ளும் பயணத்தில் தர்க்க ரீதியற்ற சட்ட திட்டங்களை தடையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

அரசாங்க மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் இருந்து வரும் பிரச்சினைகளை – சட்ட வழிமுறைகளுக்குச் செல்லாது கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

திறைசேரிக்குச் சுமையாக இல்லாத வகையில் அரச நிறுவனங்களை நடத்த வேண்டும். இதற்காக திட்டங்களை முன்வைக்கும் போது நீண்ட காலம் எடுக்கக் கூடாது. அந்தந்த நிறுவனங்களுக்கு இடையில் புரிந்துணர்வுடனும் அரச கொள்கைகளை விளங்கிக் கொண்டும் செயற்படுவதன் மூலம் பெரும்பாலான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும்.

அரசாங்கம் சரியான கொள்கை சார்ந்த தீர்மானமொன்றை எடுக்கும் போது அனைத்து அரச நிறுவனங்களும் அந்த கொள்கைகளுக்கு ஏற்ப செயற்பட வேண்டும். சரியானதை செய்வதற்கு ஒருபோதும் தடையிருக்கக் கூடாது.

சரியானதை செய்ய முடியாத அரச அதிகாரி நாட்டுக்கு ஒரு சுமை. அரச அதிகாரிகளின் பொறுப்பு பிரச்சினையை தீர்ப்பதன்றி அதிலிருந்து விலகிக்கொள்வதல்ல.

பல வருடங்களாக எதனோல் இறக்குமதி காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதனால் அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.தனியார் வியாபாரிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அந்த தீர்மானத்தை மாற்றப்போவதில்லை. – என்றார் ஜனாதிபதி.

இணை நிறுவனங்களுக்கு இடையில் இருந்துவரும் பிரச்சினைகள் உரிய முறையில் கலந்துரையாடாத காரணத்தினால், வழக்குகளுக்கு செல்ல வேண்டிய நிலை அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருப்பதும் இதன்போது தெரியவந்தது.

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு சுமார் 800 வழக்குகளைத் தாக்கல் செய்திருப்பதுடன், அவற்றில் சுமார் 300 வழக்குகள் பெருந்தோட்ட நிறுவனத்துடனானதாகும் என்பதும் தெரியவந்துள்ளது.

அமைச்சர் ரமேஷ் பதிரண மற்றும் செயலாளர் பி. பீ. ஜயசுந்தர ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.