Breaking News

“சரத் பொன்சேகாவை நியமித்து பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்..” சஜித் சூளுரை !

 

“ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் பாதுகாப்பா அல்லது ஒரு குடும்பத்தின் பாதுகாப்பா என்பதை யோசியுங்கள். குடும்ப – இராணுவ – அடிமை ஆட்சி அவசியம் இல்லை. பொதுமக்களின் சக்தியே வென்றெடுக்கப்பட வேண்டும்.

உலகத்துடன் போட்டியிட்டு முதற்தர நாடாக இலங்கையை நாங்கள் கட்டியெழுப்ப வேண்டும். நவீன யுகத்திற்கேற்றபடி எங்கள் நாட்டை மாற்றி நிம்மதி பெருமூச்சு விடும் நாடாக மாற்றி அனைத்து துறைகளிலும் மேம்படுத்த வேண்டும். நாட்டின் ஒழுங்குப்பத்திரத்தை ஒரு குடும்பம் தீர்மானித்து விட முடியாது.நாம் அமைக்கும் புதிய ஆட்சியில் திருட்டு மோசடிகளுக்கு இடமளிக்க மாட்டோம்.

எமது அரசின் கீழ் நாங்கள் சில தியாகங்களை அர்ப்பணிப்புக்களை செய்ய வேண்டும்.அப்படி செய்து மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வேண்டும். நாட்டின் இறையாண்மை பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்துவோம்.நாங்கள் நாட்டின் உரிமையாளர்கள் அல்ல. நாங்கள் நாட்டின் தற்காலிக பாதுகாவலர்கள்.இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை நாங்கள் சிறந்ததாக மாற்றியமைப்போம். பெண்களின் எதிர்காலத்தை நல்லபடியாக மாற்றி அவர்களை பாதுகாக்க நாங்கள் கொள்கை வகுப்போம்.விவசாயக் கொள்கை , தொழிலாளர் கொள்கை வகுப்போம்.

தேசிய பாதுகாப்பு குறித்து சொல்ல வேண்டும். அதனை உறுதிப்படுத்த நாங்கள் யுத்தத்தை வெற்றி கொண்டவர்களுக்கே அந்தப் பொறுப்பை வழங்க வேண்டும். தன்னை தியாகம் செய்து நேரடியாக யுத்தத்தை வென்ற பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இந்த நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். அவர் கார்ட்போர்ட் வீரர் அல்ல. அவர் நாட்டுக்கு ஆற்றிய பணியை பெருமைப்படுத்தி நாங்கள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அந்தப் பொறுப்பை அவரிடம் வழங்குவோம். எமது ஆட்சியில் எந்த அரசியல்வாதிகளுக்கும் ஜம்பர் அணிவிக்க மாட்டோம். அது நீதிமன்றம் செய்யும். ஆனால் பயங்கரவாதத்தை நாங்கள் இல்லாமலாக்குவோம்.போதைப்பொருள் ஒழிப்பை நாங்கள் மேற்கொள்வோம். போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு உயரிய தண்டனை வழங்குவோம்.

சமுர்த்தி நிவாரணம் விசேட வகையில் வழங்கப்படும்.அதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.. அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பித்து ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்குவோம். அச்சமற்ற சூழ்நிலையை நாங்கள் ஏற்படுத்துவோம்.”

ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கொழும்பில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.