சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை- சென்னை நீதிமன்றம் உத்தரவு
காசோலை மோசடி வழக்கில் சரத்குமார் மற்றும் அவர் மனைவி ராதிகா ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காசோலை மோசடி வழக்கில் குறித்த இருவரும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டதைத் தொடரந்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமார் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் மற்றும் ரேடான் மீடியா குரூப் நிறுவனம், படம் தயாரிப்பதற்காக ரேடியன்ஸ் மீடியா என்ற நிறுவனத்திடம் கடந்த 2014 ஆம் ஆண்டு 2 கோடி ரூபா கடன் பெற்றிருக்கிறார்கள்.
இதற்காக மொத்தம் 7 காசோலைகளை வழங்கியுள்ளனர். அதில், ஒரு காசோலை வங்கி கணக்கில் பணமில்லாததால் திரும்பியுள்ளது.
இதையடுத்து சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார், பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரேடான் நிறுவனம் சார்பில் 7 குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடந்தது.
இந்த வழக்கை இரத்து செய்யக் கோரி நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும், சைதாப்பேட்டை 3ஆவது விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை ஆறு மாதத்தில் விசாரணை செய்து நிறைவு செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து இன்று உத்தரவிட்டது.
மொத்தம் 7 வழக்குகளில் சரத்குமார் மீதான ஐந்து வழக்குகளில் தலா ஓராண்டும், மீதமுள்ள இரண்டு வழக்குகளில் சரத்குமார் ,ராதிகா சரத்குமார், பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு தலா ஓராண்டும் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.