விளையாட்டு

கோஹ்லி சாதனை; தொடரை வென்றது இந்தியா !மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 போட்டியில், இந்திய அணி 67 ஓட்டங்களால் வெற்றிபெற்று, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

மும்பையில் – வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணியின்  நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் மற்றும் அணித்தலைவர் விராட் கோஹ்லியின் அதிரடியுடன் வெற்றியை சுவைத்தது இந்தியா.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 240 ஓட்டங்களைப் பெற்றது.

விராட் கோஹ்லி, 21 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனைப் படைத்ததோடு, 29 பந்துகளில் 4 நான்கு ஓட்டங்கள் 7 ஆறு ஓட்டங்களுடன் அவர் 70 ஓட்டங்களைப் பெற்றார்.

ரோஹித் ஷர்மா 34 பந்துகளில் 5 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 71 ஓட்டங்களையும், ராகுல்  56 பந்துகளில், 4 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 91 ஓட்டங்களையும் குவித்தனர்.

241 என்ற மிகப்பெரிய ஓட்ட இலக்கை நோக்கி பதிலளித்தாடிய மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

கிரோன் பொல்லாட் அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 6 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 68 ஓட்டங்களையும், சிம்ரோன் ஹெட்மயர் 24 பந்துகளில் 5 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

தொடரின் நாயகனாக, விராட் கோஹ்லியும், போட்டியின் நாயகனாக கே.எல்.ராகுலும் தெரிவாகினர்.