விளையாட்டு

கொல்வ் ஜாம்பவான் டைகர் உட்ஸுக்கு உயரிய விருது – ட்ரம்ப் அறிவிப்பு

கொல்வ் விளையாட்டின் சிறந்த வீரராக திகழும் டைகர் உட்ஸ், 15-ஆவது முக்கிய தொடரில் 5-ஆவது மாஸ்டர்ஸ் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார். இதையடுத்து அவருக்கு அமெரிக்காவின் உயரிய சுதந்திரத்துக்கான ஜனாதிபதி விருது வழங்கப்படும் என ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

கொல்வ் விளையாட்டில் ,டைகர் உட்ஸ் படைத்த மகத்தான சாதனைகள் மற்றும் அவர் போராடி கடந்து வந்த பாதைகள், குறிப்பாக தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டு வந்தது ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் சுதந்திரத்துக்கான ஜனாதிபதி பதக்கம் வழங்கப்படுமென்றார் ட்ரம்ப்.

அமெரிக்காவின் மிக உயரிய விருதான சுதந்திரத்துக்கான ஜனாதிபதி விருது, தேச நலன், உலக அமைதி, பண்பாட்டு வளர்ச்சி உள்ளிட்ட இதர பொது மற்றும் தனியார் துறை சாதனைகளுக்காக வழங்கப்படுவதாகும். கடந்த 1963-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த உயரிய கௌரவத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12 பேர் வரை அமெரிக்க அரசால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

கடந்த காலங்களில் ஜோர்ஜ் டபள்யூ.புஷ் மற்றும் பரக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் பல விளையாட்டு வீரர்களை இவ்விருதுக்காக தேர்ந்தெடுத்துள்ளனர். இருப்பினும் கொல்வ் விளையாட்டுக்காக இந்த கௌரவத்தை பெறும் முதல் வீரராக டைகர் உட்ஸ் உள்ளார்.

சரியாக 14 ஆண்டுகளுக்கு முன்பு, 2005-ஆம் ஆண்டில் கொல்வ் விளையாட்டில் டைகர் உட்ஸ் முதல் பட்டம் வென்றார். பின்னர் 1997, 2001, 2002 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் மாஸ்டர்ஸ் பட்டம் வென்றுள்ளார். மேலும் ஆரம்ப காலத்தில் இருந்தே ட்ரம்ப் மற்றும் டைகர் உட்ஸ் ஆகியோருக்கு இடையே சிறந்த நட்புறவு இருந்து வருகிறது. ஃப்ளோரிடா மாகாணத்தில் இவர்கள் இருவரின் குடியிருப்புகளும் அருகருகில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.