Breaking News

கொரோனா 170 பேரை காவு கொண்டது – அடுத்த பத்து நாட்களில் தாக்கம் தீவிரமாக இருக்கலாமென தகவல் !

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு கூறியுள்ளது. மேலும் 5974 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1239 பேர் அபாய கட்டத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதைத் தவிர 9239 பேருக்கு பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

‘அடுத்த 10 நாட்களில் இந்த வைரஸ் பாதிப்பு மேலும் தீவிரமடையும்; உயிர் பலி அதிகரிக்கும்’
என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் மக்காவ் உள்ளிட்ட பகுதிகளில் இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது. இந்நிலையில் திபெத்தில் முதல் முறையாக இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விமானங்கள் ரத்து

சீனாவுக்கான விமான சேவையை பல்வேறு நாடுகளும் பல்வேறு விமான நிறுவனங்களும் ரத்து செய்துள்ளன. ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ நிறுவனம் சீனாவுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்கள் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

பாரிஸ் ரோம் உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கும் ஜப்பானின் சப்போரா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கான விமான சேவையை நிறுத்துவதாக ரஷ்யாவைச் சேர்ந்த ‘உரால்ஸ் ஏர்லைன்ஸ்’ அறிவித்துள்ளது. ஆசிய நாடான இந்தோனேஷியாவைச் சேர்ந்த
‘லயன் ஏர்’ நிறுவனமும் சீனாவுக்கான விமான சேவையை நிறுத்தியுள்ளது. டில்லியில் இருந்து சீனாவின் செங்க்டுவுக்கு இடையே இயக்கப்படும் விமான சேவையை பிப். 1 – 20 வரை நிறுத்தி வைப்பதாக ‘இண்டிகோ’ நிறுவனம் அறிவித்துள்ளது. பெங்களூரு – ஹொங்கொங் சேவையையும் நிறுத்துவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.டில்லி -ஷாங்காய் விமான சேவையை
ஜன.31 – பிப்.14 வரை நிறுத்துவதாக ‘ஏர்இந்தியா’அறிவித்துள்ளது.

வெளியேற்றம்

சீனாவின் வூஹான் நகர் இந்த வைரஸ் பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நகரில் உள்ள மருத்துவக் கல்லுாரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் வெளிநாடுகளைச்
சேர்ந்தவர்கள் அதிகமாக படிக்கின்றனர். மேலும் சீன நிறுவனங்களிலும் வெளிநாட்டவர் அதிகம் வேலை பார்க்கின்றனர்.

இங்கு படிக்கும் மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு அனுமதிக்கும்படி இந்தியா உட்பட
பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதற்கு தேவையான உதவிகளை செய்ய
தயாராக இருப்பதாக சீனா கூறியுள்ளது.அதன்படி வூஹான் நகரில் இருந்து 240 அமெரிக்க மாணவர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பினர். அவர்களை அழைத்து செல்ல சிறப்பு விமானத்தை அமெரிக்கா அனுப்பியிருந்தது. ஜப்பானும் 206 பேரை சிறப்பு விமானம் மூலம் அழைத்து
சென்றுள்ளது.

பாகிஸ்தானுக்கும் பரவியது

கொரோனா வைரஸ் பாதிப்பு பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. சீனாவின் வூஹான் நகரில் படித்து வரும் நான்கு பாகிஸ்தான் மாணவர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் மேற்கு ஆசிய நாடான யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சில் முதல் முறையாக இந்த வைரஸ் பாதிப்பு தென்பட்டுள்ளது. வூஹானில் இருந்து திரும்பிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் கண்காணிப்பு

சீனாவுக்கு சென்று திரும்பிய சிலருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சத்தில்இந்தியாவிலும் ஏற்கனவே உஷார்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இந்த வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சத்தில் எட்டு பேர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

‘ஆறு மாதத்தில் தடுப்பூசி’

அமெரிக்காவின் தேசிய சுகாதார மைய மூத்த அதிகாரி அன்ரனி பாசி கூறியதாவது:கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். முதல் கட்ட பரிசோதனை தேவையான தகவல்கள் பெறுவது உள்ளிட்டவை முடிந்த பிறகே இந்த தடுப்பூசியை பயன்படுத்த முடியும். அதற்கு குறைந்த பட்சம் ஆறு மாதங்களாவது ஆகும்.

இந்த விவகாரத்தில் சீனாவுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாக மூன்று முறை தகவல் அனுப்பியுள்ளோம். ஆனால் சீனா ஒத்துழைக்கவில்லை. சர்வதேச நாடுகளுடன் இணைந்து
ஒத்துழைத்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.தற்போதைய நிலையில் மருந்து தடுப்பூசி இல்லாததால் இந்த வைரஸ் பாதிப்பு மேலும் தீவிரமாகும் அபாயம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

ஆயுர்வேதம், யுனானியில் மருந்து

இந்தியா நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஹோமியோபதி மற்றும் யுனானி
மருத்துவத்தில் சில மருந்துகள் உள்ளன. இந்த வைரஸ் பாதிப்பு இருந்தால்
முன்னெச்சரிக்கையாக சில மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

குறிப்பாக ‘ஆர்செனிகம் ஆல்பம் – 30’ என்ற மருந்தை வெறும் வயிற்றில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு எடுத்துக் கொள்ளவேண்டும். வைரஸ் பாதிப்பு தொடர்ந்துஇருந்தால் ஒரு மாத இடைவெளியில் மீண்டும் மூன்று நாட்களுக்கு இந்த மருந்தை எடுத்துக் கொள்ளலாம்.
எப்போதும் சுத்தமாக இருப்பது கைகளை சவர்க்காரம் மூலம் கழுவுவது போன்ற சுகாதார
பாதுகாப்பை கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எச்சரிக்கை !

ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த சவுத்ஹாம்ப்டன் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சீனாவில் இருந்து பல்வேறு
நாடுகளுக்கு இயக்கப்படும் விமான சேவையின் அடிப்படையில் ஆராய்ந்தபோது கொரோனா வைரஸ் பாதிப்பு எந்தெந்த நாடுகளுக்கு மிக வேகமாக பரவும் என்பதை கணித்துள்ளோம்.

அதன்படி 30 நாடுகள் ‘அதிக அபாயம்’ பட்டியலில் உள்ளன. இதில் தாய்லாந்து முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடத்தில் ஜப்பான், ஹொங்கொங் உள்ளன. இந்தப் பட்டியலில் அமெரிக்கா ஆறாவது இடத்திலும் ஆஸ்திரேலியா 10வது இடத்திலும் பிரிட்டன் 17வது இடத்திலும் இந்தியா 23வது இடத்திலும் உள்ளன.

அதேபோல் அதிகம் பாதிக்கப்படும் முக்கிய நகரங்கள் பட்டியலில் தாய்லாந்தின் பாங்காக்
முதலிடத்தில் உள்ளது. ஹொங்கொங் தைவானின் தைபே அதற்கடுத்த இடங்களில் உள்ளன. முதல் 20 நகரங்கள் பட்டியலில் சிட்னி நியூயார்க் லண்டன் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாழடைந்த நட்சத்திர ஓட்டல்கள்

வைரஸ் பாதிப்பு மிகவும் தீவிரமாக உள்ள சீனாவின் வூஹான் நகரில் உள்ள நட்சத்திர
ஓட்டல்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. எப்போதும் அறைகள் கிடைப்பதற்கு போராட வேண்டிய இந்த ஓட்டல்கள்மற்றும் உணவு விடுதிகளில் யாரும் காணப்படவில்லை.பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. சில ஓட்டல்கள் மட்டுமே திறந்து வைக்கப்பட்டு உள்ளன.

சீனாவில் புத்தாண்டு துவங்கியுள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடக்கும். வெளிநாடுகளில் வேலை பார்க்கும் சீனர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டவரும் இந்த காலத்தில் சீன நகரங்களுக்கு வருகை தருவர்.ஆனால் தற்போது கொண்டாட்டங்கள் இல்லாததால் சுற்றுலா பயணியர் வருகையும் கிட்டத்தட்ட நின்றுவிட்டது.