Breaking News

கொரோனா வைரஸ் தாக்கம் – உலக அளவில் உயிரிழப்பு 47 ஆயிரத்தை தாண்டியது !

 

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக அளவில் 9 லட்சத்து 35 ஆயிரத்து 957 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மொத்தமாக இதுவரை 47 ஆயிரத்து 245 பேர் உயிரிழந்துள்ளனர்.ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 284 பேர் குணமடைந்துள்ளனர்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது. மேலும், நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு 660 பேர் பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவில் மனிதர்களை கொரோனா முழுவீச்சில் தாக்கி அழிக்கிறது . நேற்று ஒரே நாளில் மட்டும் 22 ஆயிரத்து 613 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது.நேற்று மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு 660 பேர் பலியாகி இருக்கின்றனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5ஆயிரத்து 110 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பிடியிலிருந்து தப்ப வீட்டிலேயே இருங்கள் என்பது பொய் அல்ல நிஜம். மிகவும் கவனமாக இருங்கள் என இத்தாலியின் யுவென்டஸ் அணிக்காக விளையாடி வந்த ஆர்ஜென்ரீன வீரர் பவுலோ டைபாலா, யோசனை தெரிவித்துள்ளார்

26 வயதான பவுலோ டைபாலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் அவருக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது கொரோனா பிடியில் இருந்து தப்பிவிட்டார்.

ஒரே ஆயுதம்

வீட்டிற்குள்ளேயே இருங்கள் (Stay at Home) இந்த வார்த்தைதான் கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது எல்லா நாடுகளும் கடைபிடிக்க வேண்டிய ஒரே ஆயுதமாக உள்ளது.

எனக்கு மோசமான இருமல் இருந்தது, தூங்கும்போது மிகவும் சோர்வாக இருந்தேன். குளிராக இருப்பது போன்று உணர்ந்தேன். முதலில் இது என்னவாக இருக்கும் என்பது குறித்து நினைக்கவில்லை. ஆனால், முதலில் எனது அணியில் உள்ள சக வீரர்கள் இருவருக்கு உறுதி செய்யப்பட்ட பிறகு, எனக்கு தொற்றிக் கொண்டது உறுதியானது.
எங்களுக்கு தலைவலி இருந்தது. ஆனால், எதையும் நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. கிளப் எங்களுக்கு விட்டமின்கள் கொடுத்தது. அதன்பின் நாங்கள் குணமடைந்து வந்ததை உணர்ந்தோம். இது மனநிலையை பொறுத்தது. முதலில் பயமாக இருந்தது. தற்போது சரியாகி விட்டது. தற்போது எங்களுக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை, இவ்வாறு டைபாலா தெரிவித்துள்ளார்.

என்று தணியும் இந்த கொரோனா சீற்றம்?

மூன்று மாதங்களுக்கு முன்னர் சாதாரண செய்தியாக இருந்த கொரோனா நோய்த்தொற்று, இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

அந்தச் செய்திகளை அநாயசமாக பார்த்து அலட்சியமாக நகர்ந்து போன கோடிக்கணக்கான பேர் , இன்று கொரோனா நோய்த்தொற்றுக்குப் பயந்து வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். வெளியே செல்ல நேர்ந்தாலும் , சமூக இடைவெளி, முகக் கவசங்கள் என கொரோனா அச்சம் அவர்களை பின்தொடர்கிறது.

இலங்கை , இந்தியா, அமெரிக்கா உள்பட ஏராளமான நாடுகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், உலக மக்கள் தொகையில் சுமார் பாதிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்த இக்கட்டான சூழலில், ஒரே ஒரு கேள்வி மட்டும் எழாமல் இருக்க முடியாது.

உலகை கதிகலங்க வைத்துள்ள இந்த கரோனா நோய்த்தொற்றின் சீற்றம் என்று தணியும்? அந்த நோயின் பாதிப்பிலிருந்தும் அச்சத்திலிருந்து உலகம் எப்போது மீண்டு வரும்?

இந்தக் கேள்விக்கு யாராலும் மிக எளிதான, உறுதியான பதிலைச் சொல்ல முடியாது என்பதுதான் உண்மை நிலை.

தற்போதுள்ள சூழலில், இன்னும் ஒரு சில வாரங்களில் கூட இதுதொடர்பாக எத்தகைய தீர்க்கமான முடிவுக்கும் வர முடியாது என்கின்றனர் மருத்துவத் துறை நிபுணர்கள்.

இதுகுறித்து அமெரிக்க நோய் ஆய்வு மருத்துவர் சங்க நிபுணர்கள் கூறுகையில், ‘கொரோனா நோய்த்தொற்று வளர்ச்சியை நாம் எவ்வளவு விரைவில் நிறுத்துகிறோம், தினசரி அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எப்போது குறையத் தொடங்குகிறது என்பதைப் பொறுத்தே, அந்த நோயிலிருந்து நாம் எப்போது விடுபடுவோம் என்பதைத் தீர்மானிக்க முடியும்’ என்கின்றனர்.

அதே நேரம், நோய்த்தொற்று அடங்குவதைப் போன்று தோன்றினாலும், அது மீண்டும் தலையெடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம் என்று அவாகள் எச்சரிக்கின்றனர்..

‘புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் கொரோனா பரவலிலிருந்து விடுபட்டுவிட்டதாக எண்ணி, நாடுகளின் அரசுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தினாலோ , பொதுமக்கள் எச்சரிக்கை உணர்வைக் கைவிட்டு அலட்சியமாக நடந்து கொண்டாலோ கொரோனா நோய்த்தொற்றின் அடுத்த பேரலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

கொரோனா நோய்த்தொற்றின் கோரக் கரங்களிலிருந்து எப்போது விடுபடுவோம் என்பதைக் கணிப்பதற்காக, சில நிபுணர்கள் ஏற்கெனவே உலகில் பரவி அழிவை ஏற்படுத்திய நோய்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

குறிப்பாக, கடந்த 1918-ஆம் ஆண்டு பரவிய ‘ஸ்பெயின் ஃபுளூ’, 2003-ஆம் ஆண்டில் பரவிய சார்ஸ் ஆகிய இரண்டு நோய்த்தொற்று தொடா்பான புள்ளிவிவரங்களைக் கொண்டு, தற்போதைய கொரோனாவின் தாக்கம் எத்தனை காலம் நீடிக்கும் என்பதை கணிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

காரணம், அந்த இரண்டு வைரஸ்களும் கொரோனா நோய்த்தொற்று போலவே இருமல், தும்மல், எச்சில் போன்ற துளிமங்களாக வெளியேறி, மனிதரது சுவாசப் பாதையில் நுழைந்து பரவியவை; அவற்றின் வளர்ச்சி காலமும் கொரோனா நோய்த்தொற்றோடு ஒத்துள்ளன.

ஆனால், சார்ஸை பொறுத்தவரை அது உலகம் முழுவதும் 8,098 பேருக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த நோய்த் தொற்று காரணமாக, 8 மாதங்களில் 774 பேர் மட்டுமே உயிரிழந்தனர்.. அதற்குப் பிறகு சார்சின் தாக்கம் தணிந்துவிட்டது.

ஆனால், அந்த வைரஸைப் போலவே செயல்படும் கொரோனா நோய்த்தொற்றோ, 3 மாதங்களுக்குள்ள உலகின் 210 நாடுகளில் லட்சக்கணக்கானோருக்கு பரவிவிட்டது; 47ஆயிரத்துக்கும் மேலானோர் அந்த நோய்த்தொற்று காரணமாக பலியாகினர்.

எனவே, கொரோனா நோய்த்தொற்றை சார்சுடன் ஒப்பிடுவதைவிட, 1918-ஆம் ஆண்டில் பரவிய ஸ்பெயின் ஃபுளூவுடன் ஒப்பிடுவதே பொருத்தமாக இருக்கும் என்கின்றனர் அமெரிக்க தொற்று நோய் நிபுணர் சங்கத்தினா்.

கொரோனா வைரஸ் போலவே, ஸ்பெயின் ஃபுளூ பரவத் தொடங்கிய பல மாதங்களுக்கு சமூக விலகல், வீட்டுக்குள் தனித்திருத்தல் ஆகியவை கடைப்பிடிக்கப்படாததால் அந்த வைரஸ் காட்டுத் தீ போல் பரவியது. அந்த நோய்த்தொற்று 50 கோடி பேருக்கு பரவியதாகவும் அவா்களில் 1.7 கோடி முதல் 5 கோடி பேர் வரை பலியானதாகவும் கணக்கிடப்படுகிறது.

1918-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பரவத் தொடங்கிய ஸ்பெயின் ஃபுளூ, ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு தனது சீற்றத்தைக் காட்டி 1920-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்தில்தான் தணிந்தது.

அதற்குள் அந்த வைரஸ் பரவல் பல முறை தணிந்து மீண்டும் சீற்றமடைந்தது.

எனினும், தற்போதைய நவீன மருத்துவ வசதிகள், விழிப்புணா்வை ஏற்படுத்தும் ஊடகங்கள், தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை 1920-ஆம் ஆண்டில் இல்லை என்பதால், ஸ்பெயின் ஃபுளூவின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை வைத்து கொரோனா வைரஸின் எதிர்காலத்தை துல்லியமாகக் கணிக்க முடியாது என்கின்றனர் நிபுணர்கள் .

இதையடுத்து, புள்ளியியல் வல்லுநர்கள் , கணினிப் பொறியிலாளர்கள் இணைந்து, தொழில்நுட்ப ரீதியில் கொரோனா நோய்த்தொற்று எவ்வளவு காலத்துக்கு வளர்ச்சியடையும் , எப்போது தணியத் தொடங்கும் என்பதை கணித்துள்ளனர்..

அவர்களது கணிப்புப்படி, ஏப்ரல் அல்லது மே மாதத் தொடக்கம் வரை கொரோனா நோய்த்தொற்று உக்கிரம் காட்டலாம்; பிறகு தணியத் தொடங்கலாம் என்று நம்பப்படுகிறது. எனினும், நாடுகளின் அரசுகள் தற்போது விதித்துள்ள கட்டுப்பாடுகளைத் தொடா்ந்தால்தான் இதனை உறுதி செய்ய முடியும் என்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போதைய நிலையில் கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தியுள்ள சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளின் உத்திகளை பிற நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டும்; தவறான முடிவுகளை எடுத்து பரவலை அதிகரித்துக் கொண்ட இத்தாலி போன்ற நாடுகளிடமிருந்து மற்ற நாடுகள் பாடம் கற்க வேண்டும். அவற்றின் அடிப்படையில் முடிவுகளை எடுத்தால் 4 முதல் 6 வாரங்களுக்குள் கொரோனா சீற்றம் தணிவதற்கான வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒருவைளை அப்படியே கொரோனா நோய்த்தொற்றின் வேகம் தணிந்தாலும், அதன் பிறகு நமது அலட்சியம் காரணமாக அந்த நோய்த்தொற்றின் புதிய அலைகள் தோன்றிக் கொண்டே இருக்கலாம்; இந்தப் போக்கு 12 மாதங்களுக்கு மேல் நீடிக்கலாம் என்பது அவர்களின் கணிப்பாக உள்ளது.

இருந்தாலும், வீடுகளில் தனித்திருத்தல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகிய அரசுக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடிப்பதைப் பொருத்துதான் கொரோனா நோய்த்தொற்றின் ஆதிக்கத்திலிருந்து நாம் விடுபட முடியும் என்று என்பதை நிபுணா்களும் ஒரே குரலில் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, கொரோனா சீற்றம் என்று தணியப்போகிறது என்பது நம் கைகளில்தான் உள்ளது என்பதை உணர்வோம். வீடுகளில் தனித்திருப்போம்; சமூக இடைவெளியை கடைப்பிடிப்போம்.