Breaking News

கொரோனா தாக்க உலக உயிரிழப்பு 17 ஆயிரத்தை நெருங்கியது – வைரஸுக்கான புதிய அறிகுறிகள் கண்டுபிடிப்பு !

இன்று மாலை நிலவரப்படி கொரோனாவால் உலக அளவில் 3 லட்சத்து 83 ஆயிரத்து 900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்து 586 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 536 பேர் மீண்டனர்.

122 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்த ஈரானில் மொத்தமாக இதுவரை 1934 பேர் உயிரிழந்தனர்.ஸ்பெயினில் புதிய 514 உயிரிழப்புகளுடன் அங்கு மொத்தமாக இதுவரை 2696 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸால் 85 வீதமான உயிரிழப்புகள் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நடந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

கொரோனாவுக்கான அறிகுறிகளில் புதிதாக ஒன்று : பிரான்ஸ் விஞ்ஞானிகள்

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான அறிகுறிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் பிரான்ஸ் சுகாதாரத்துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிதாக ஒரு அறிகுறியை கண்டுபிடித்துள்ளனர்.

உலக நாடுகளில் கடும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயின் அறிகுறிகளாக கடுமையான காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சுத்திணறல், போன்றவற்றை மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் சுகாதாரத்துறையைச் சேர்ந்த விஞ்ஞானி ஜெரோம் சொலமன், கொரோனா தாக்கிய நோயாளிகளை ஆய்வு செய்த போது, வாசனை அறியும் திறனை இழப்பதும் கொரோனாவுக்கான அறிகுறி என கண்டுபிடித்துள்ளார். இந்த ஆய்வின் மூலம் ஏற்கனவே கொரோனாவுக்கான அறிகுறிகளுடன் இதுவும் சேர்க்கப்படுவதாக பிரான்ஸ் மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் விஞ்ஞானிகளின் இந்த ஆய்வின் முடிவை, பிரிட்டன் டாக்டர்களும் ஆமோதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் பிற்போடப்பட்டது !

ஜப்பானின் டோக்கியோவில் வரும் ஜூலை 24-ஆக. 9ல் ஒலிம்பிக் போட்டி நடக்க இருந்தது. ஆனால், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், அனைத்து தகுதிச் சுற்றுகளும் ரத்தாகின. வீர, வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட முடியாமல் தவித்தனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து நட்சத்திரங்கள் உட்பட அந்த நாடுகளின் ஒலிம்பிக் கமிட்டியும் போட்டியை ஒத்தி ]வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன.
இருப்பினும் திட்டமிட்டபடி ஒலிம்பிக் நடக்கும் என கூறப்பட்டது. இதனிடையே பல்வேறு தரப்பில் இருந்து வந்த நெருக்கடிகளை அடுத்து, ஒலிம்பிக் போட்டி ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டது.

இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தோமஸ் பாக்கிடம், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பேச்சு நடத்தினார். இதையடுத்து ஒலிம்பிக்கை ஒரு ஆண்டு ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.

வீடுகளில் முடங்கியுள்ள 100 கோடி மக்கள்

கொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் சுமார் 100 கோடி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாலி, பிரித்தானியா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாடுகளில் வீடுகளை விட்டு மக்கள் வெளியே வரத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் சுமார் 16 மாகாணங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் கடந்த 2 வாரங்களாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் உள்ளனர்.

இத்தாலியில் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் வைரஸ் தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ளது.

பொதுமக்கள் கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடித்தால் சீனாவை போன்று இத்தாலியும் வைரஸ் பாதிப்பில் இருந்து விரைவில் மீளும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய உலக நாடுகள் மேற்கொண்டுள்ள வைரஸ் கட்டுப்பாட்டு நடைமுறைகளால் உலகம் முழுவதும் சுமார் 100 கோடி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இங்கிலாந்து மக்களுக்கு கடுமையான புதிய கட்டுப்பாடுகள் !

கொரோனா வைரஸ் பரவுவதைச் தடுப்பதற்கு இங்கிலாந்து மக்களின் அன்றாட செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் அந்நாட்டு பிரதமரால் அறிவிக்கப்பட்டுள்ளன.

மக்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உடற்பயிற்சி செய்வதற்கும், “முற்றிலும் அவசியமான” வேலைக்குச் செல்வதற்கும், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும், எந்தவொரு வைத்திய தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கும் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை மூடுமாறு கூறப்பட்டுள்ளதுடன், ஒன்றாக வசிக்காத இரண்டுக்கும் மேற்பட்ட மக்கள் பொதுவில் ஒன்றுகூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

மக்கள் விதிகளைப் பின்பற்றாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என்பதோடு, இந்த விடயத்தில் பொலிஸாருக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.