கொரோனா கவச உடை அணிந்து வாக்களித்தார் கனிமொழி எம்.பி.
திமுக எம்.பி கனிமொழி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா கவச உடையான பிபிஇ உடை அணிந்து வந்து தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயகக் கடமையாற்றினார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. திரை உலக பிரபலங்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் காலை முதலே வாக்களித்தனர்.
மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. 6 மணிக்கு மேல் கொரோனா பாதித்த நோயாளர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பிபிஇ உடை அணிந்து வந்து பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ்சில் வந்து வாக்களித்தனர்.
இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் திமுக எம்.பி. கனிமொழி வாக்களித்தார். கொரோனா கவச உடை அணிந்த படி சென்னை மயிலாப்பூர் எப்பாஸ் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி ஈடுபட்டு இருந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து கனிமொழி தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.