Breaking News

கொரோனா உலக உயிரிழப்பு 27ஆயிரத்தை தாண்டியது – இத்தாலி மரணபூமியான சோகம் !

 

கொரோனா வைரஸ் தாக்கி உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 370ஆக அதிகரித்துள்ளது.இத்தாலியில் 8215 பேர் உயிரிழந்தனர்.கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 919 பேர் உயிரிழந்தனர்.இந்தியாவில் உயிரிழப்பு 21 பேராக உயர்ந்தது.

அமெரிக்காவில் புதிதாக 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கொரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) ஏற்பட்டுள்ளதையடுத்து, அதனால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில் அந்த நாடு சீனாவையும் விஞ்சி முதலாவது இடத்துக்கு வந்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது ,

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16,824 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, அந்த நாட்டில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 86,043-ஆக உயா்ந்துள்ளது. இதன்மூலம், உலகிலேயே அதிக கொரோனாநோயாளிகளைக் கொண்ட நாடாக அமெரிக்கா ஆகியுள்ளது.

இதுவரை அந்த நிலையில் இருந்து வந்த கொரோனாநோய்த்தொற்றின் தோற்றுவாயான சீனா, 81,340 நோயாளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.ஒரே நாளில் அதிக உயிரிழப்பு கடந்த வியாழக்கிழமை மட்டும் அமெரிக்காவில் 263 போ் கரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தனா்.
அந்த நாளில் கரோனா நோய்த்தொற்றுக்கு பிற நாடுகளில் பலியானவா்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இது அதிகபட்ச எண்ணிக்கையாகும். இத்துடன் அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை, வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 1,304-ஆக அதிகரித்துள்ளது.

டிரம்ப் விளக்கம்

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்படுபவா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதன் காரணமாகவே, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் வேகமாக அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளாா்.

அமெரிக்காவைவிட சீனாவில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு, அந்த நாட்டில் எத்தனை பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்ற உண்மை நிலவரம் யாருக்கும் தெரியாமல் இருப்பதே காரணம் என்று அவா் கூறினாா்.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் முதல் முதலில் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி உலகின் 179 நாடுகளில் 5.45 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக சுகாதார அமைப்பால் கொவைட்-19 எனப் பெயரிடப்பட்ட அந்த நோய்த்தொற்று காரணமாக இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் பலியாகினா்.

இதையடுத்து, இலங்கை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன . இதன் காரணமாக, உலக மக்கள்தொகையில் சுமாா் மூன்றில் ஒரு பங்கினா் தங்கள் வீடுகளில் முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூா் – நெருக்கமாக நின்றால் சிறை

கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, பொது இடங்களில் குறிப்பிட்ட இடைவெளியின்றி நிற்பவா்களுக்கு 6 மாத கால சிறை தண்டனை அளிக்க சிங்கப்பூா் அரசு திட்டமிட்டு வருகிறது. அதுமட்டுமன்றி, சமூக இடைவெளி விதிமுறைகளை மீறுபவா்களுக்கு 10 ஆயிரம் சிங்கப்பூா் டொலா் (சுமாா் ரூ.5.3 லட்சம்) அபராதமும் விதிக்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

ஈரான் – தவறான நம்பிக்கைக்கு 300 போ் பலி

மது அருந்தினால் கரோனா நோய்த்தொற்றிலிருந்து தப்பலாம் என்ற தவறான நம்பிக்கை காரணமாக, ஈரானில் 300-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்லாமிய நாடான ஈரானில் மதுவகைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், கள்ளச் சாராயம், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எத்தனோல் போன்றவற்றை கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தப்புவதற்காக பலா் அருந்துவதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உகாண்டா – இருவா் மீது துப்பாக்கிச் சூடு

உகாண்டாவில், கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறி, மோட்டாா் சைக்கிளில் சென்ற இருவா் மீது அந்த நாட்டு பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதனால் காயமடைந்த அந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் தன் இயலாமையால் கொரோனாவின் அகோரப்பசிக்கு விலை மதிப்பில்லா மனித உயிர்களை இரையாக்கி வருகிறது.

தலைநகர் மேட்ரிட்டில் நாள்தோறும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் இடமில்லை. ‘லா பஸ்’ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இடம் எப்போது ‘காலி’யாகும் என வெளியே ஏராளமான நோயாளிகள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நேரமின்றி மருத்துவர்கள் இதர நோயாளிகளை கவனிக்கின்றனர்.

மருத்துவமனையில் இடப்பற்றாக்குறையால் ‘வாழ்ந்து முடித்த முதியோர்கள் வாழத் துவங்கியுள்ள இளையோருக்கு வழி விட வேண்டும்’ என வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான முதியோர்கள் தங்கள் முடிவை மருத்துவர்களிடம் ஒப்படைத்து விட்டு மருத்துவமனை வாசல்களில் மரணத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

சீனாவை விஞ்சிய ஸ்பெயின்

ஸ்பெயினில் கொரோனா பலி சீனாவை மிஞ்சி 4089 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 25ம் தேதி ஒரே நாளில் 738 பேர் பலியாயினர். ஏராளமான முதியோர் காப்பகங்களில் ஊழியர்கள் உயிருக்கு பயந்து ஓடி விட்டனர். இதனால் பல காப்பகங்களில் கொரோனா பாதித்த முதியோர் சிகிச்சையின்றி இறந்து கிடக்கின்றனர். அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மரணம் அடைந்தோரை புதைக்க கல்லறைகளில் இடமில்லை. ஏராளமானோர் ஐஸ் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பெட்டிகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பிரதமரின் கவனக்குறைவு

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கொரோனாவை மிகக் குறைவாக மதிப்பிட்டு விட்டார். அண்டைநாடான இத்தாலியில் மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்ததை அவர் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை.வடக்கு இத்தாலியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பெட்ரோ சான்செஸ் 8ம் தேதி உலக மகளிர் தின பேரணியில் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

பெட்ரோ சான்செசின் மனைவி பெகோனா கோமஸ் தலைமையில் மேட்ரிட்டில் நடைபெற்ற பேரணியில் ஒரு லட்சத்திற்கும் லட்சம் பேர் கலந்து கொண்டனர். ஒரு வாரத்திற்குள்ளாக கோமஸ் துணை பிரதமர் கார்மன் கால்வோ அமைச்சர் ஐரின் மான்டிரோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பெட்ரோ சான்செஸ் தற்போது உயிர் பயத்தில் தனியிடத்தில் உள்ளார். ஸ்பெயினில் கொரோனா தொற்று பாதித்தோரில் 4000 மருத்துவ ஊழியர்களும் அடங்குவர் என்பது தான் வேதனை. தனிமைப்படுத்தப்பட்ட 635 பேர் உத்தரவை மதிக்காமல் வெளியே சென்றதால் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 லட்சம் முக கவசங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

ஸ்பெயினில் 65 ஆயிரத்து 719 பேர் பாதிக்கப்பட்டு இதுவரை 5 ஆயிரத்து 138 பேர் உயிரிழந்துள்ளனர்.773 புதிய மரணங்கள் அங்கு பதிவாகியுள்ளன.

நிதி நெருக்கடி

தேசம் முடங்கியுள்ளதால் நிதி நெருக்கடியை சமாளிக்க ஸ்பெயின் அரசு கடன் பத்திரங்களை விற்பனை செய்து 77ஆயிரம் கோடி ரூபாய் திரட்டியது.எனினும் கொரோனா பாதிப்பில் இருந்து ஸ்பெயின் பொருளாதாரம் எப்போது மீண்டெழும் என்பது வரும் நாட்களில் தெரியும் நோயாளிகள் எண்ணிக்கைதான் முடிவு செய்யும் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். அங்கு நேற்று முன்தின நிலவரப்படி 56 ஆயிரத்து 168 பேர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். 7015 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஜெர்மனியில் 50 ஆயிரத்து பேர் பாதிக்கப்பட்டு 351 உயிரிழப்புகள் ,பிரேசிலில் 3475 பேர் பாதிக்கப்பட்டு 93 உயிரிழப்புகள் , நியூயோர்க் பொலிஸ் திணைக்கள 512 பொலிஸாருக்கு வைரஸ் தாக்கியுள்ளது.அதில் இருவர் இறந்துள்ளனர்.கடந்த 24 மணிநேரத்தில் இத்தாலியில் 919 பேரும் ஸ்பெயினில் 773 பேரும் சீனாவில் 254 பேரும் உயிரிழப்பு

இந்தியாவில் முதல்முறையாக, கொரோனா வைரசின் படங்களை, புனே தேசிய வைராலஜி ஆராய்ச்சியாளர்கள் அதிநவீன நுண்ணோக்கி உதவியுடன் படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

 

கடந்த ஜனவரியில் வூஹானிலிருந்து, வந்த கேரள மாணவிக்கு, இந்தியாவில் முதல்முதலாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவரிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில், கொரோனா வைரசின் தோற்றத்தை, அதிநவீன மின்னணு நுண்ணோக்கியின் உதவியுடன் படங்கள் எடுத்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். ‘சார்ஸ் – சிஓவி-2’ என்ற அந்த வைரசின் படங்களை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிட்டுள்ளது.

இந்த வைரஸ், கடந்த 2012ல் பரவிய ‘மெர்ஸ் – சிஓவி’ மற்றும் 2002ல் பரவிய ‘சார்ஸ் – சிஓவி’ வைரஸ்களின் தோற்றங்களை ஒத்திருப்பதாக தேசிய வைராலஜி ஆய்வு நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய மத்திய, மாநில அரசுகள், பலமுறை அறிவுறுத்தியும், பலரும் வீட்டில் இல்லாமல் அலட்சியப் போக்குடன் வெளியில் சுற்றித் திரிகின்றனர். இவர்களால், தமிழகத்தில், ‘கொரோனா’ வைரஸ், சமூக தொற்றாக பரவும் அபாயம் உருவாகி உள்ளது.

கொரோனா பரவாமல் தடுக்க அவசர அவசரமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நோயால் ஏற்பட்ட இறப்பு, இத்தாலியில், 8,000த்தையும், ஸ்பெயினில், 4,000த்தையும் தாண்டிவிட்டது. பொருளாதாரத்தில், மருத்துவத்தில் முன்னேறிய நாடுகள் கூட, திடீரென அதிகரித்த நோய் தொற்றால் தவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், இந்நோய் குறித்த அலட்சியப் போக்கே. பாதிப்பு அதிகரித்த பின், அவசர அவசரமாக ஊரடங்கு பிறப்பித்து வருகின்றன.

அதேபோல், இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் அலட்சியப் போக்கு நீடித்தால், அதன் விளைவுகள், பல மடங்கு அதிகமாக இருக்கும். தமிழகத்தில் தடை உத்தரவு அமுலானாலும், மக்கள் ஒத்துழைப்பு முழுமையாக இல்லை. இந்நோய் தொற்று குறித்த அபாயத்தை உணராமல், பொலீசாருக்கு, ‘டிமிக்கி’ கொடுத்து, ஊர் சுற்றுவதில், சிலர் இன்பம் காண்கின்றனர்.

மக்களின் அத்தியாவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, அதன் விற்பனை தடை செய்யப்படவில்லை. ஆனால், இதை சாதகமாக பயன்படுத்தி, சாலையில் சுற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக, உழவர் சந்தைகளில், காய்கறி வாங்க, போட்டி போட்டு கும்பலாக நிற்கின்றனர். அதிலும் பலர், அன்றைய தேவைக்கு மட்டும் காய்கறி வாங்கிச் செல்கின்றனர். மீண்டும் அடுத்தடுத்த நாட்களில், உழவர் சந்தை உள்ளிட்ட பொது இடங்களில் வலம் வருகின்றனர்.

இப்படி தினமும் ஒரு மணி நேரம் வரை, ஊர் சுற்ற, பொருட்கள் வாங்குவதாக காரணம் சொல்கின்றனர். ஆபத்து காலத்தில், ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகளை வாங்கலாம் என்றோ, அவசியமின்றி வெளியே வரக்கூடாது என்ற எண்ணமோ பலரிடம் இல்லை. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசார், பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகளை வைத்துள்ளனர். ஆனால், பலரும் மருந்து சீட்டு, மருத்துவமனை கார்டுகளை வைத்து, இருசக்கர வாகனங்கள், கார்களில் தாராளமாக செல்கின்றனர்.

பொலிசார் தடுத்து நிறுத்தி கேட்டால், மருந்துக் கடை, மருத்துவமனை, வங்கிகள் மற்றும் மளிகை கடைகளுக்கு செல்வதாக பதில் அளிக்கின்றனர். இதனால், தெருவில் உலா வரும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களை கட்டுப்படுத்த முடியாமல், பொலிஸார் திணறுகின்றனர். இதனால், சமூக தொற்று ஏற்பட்டு பலருக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது.இத்தாலியில் ஒரே ஒரு பெண் மூலம் 30 சதவீதம் பேர் தொற்றுக்கு ஆளாகினர் என்கிறது புள்ளி விபரம்.

ஒவ்வொருவரின் அலட்சியப் போக்கும், பல நோயாளிகளை, வயதானவர்களை, கர்ப்பிணிகளை, குழந்தைகளை பாதிக்கும் என்பதை உணர்வதில்லை. நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் வீழ்ச்சி ஏற்படும் என்ற நிலையிலும், மத்திய அரசு எடுத்துள்ள ஊரடங்கு உத்தரவு முடிவு, எந்த அளவுக்கு முக்கியமானது என்பது, பலருக்கும் புரியவில்லை. ‘எனவே, ஊர் சுற்றுவோரை கடுமையாக தண்டித்து, நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும்’ என, இந்திய மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஜப்பானை பின்பற்றுவோம்:

கொரோனா பரவ தொடங்கிய போது, நோய் தொற்று எண்ணிக்கையில், இரண்டாம் இடத்திலிருந்த ஜப்பான், பின் சுதாரித்து, அரசு எடுத்த நடவடிக்கை, மக்களின் சுய ஒழுக்கம், அங்கு கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியுள்ளது. சில நாட்களாக, அங்கு புது தொற்று வரவில்லை. தற்போது வரை, 1,387 பேர் மட்டும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்ற நிலை வரவேண்டும் என்றால், பொதுமக்கள் ஒத்துழைப்பு, சுயக் கட்டுப்பாடு அவசியம்.