Breaking News

கொரோனாவால் அலறும் அமெரிக்கா; 2 டிரில்லியன் டொலர் நிவாரண நிதி ஒதுக்கீடு

உலகில் மற்ற எந்த நாட்டை விடவும் அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றால் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதுவரை அங்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால், அமெரிக்காவில் 33 லட்சம் பேர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். இதனால், பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் அரசிடம் நிவாரணம் கோரி வந்தனர்.

கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்களை மீட்க, 2 டிரில்லியன் டொலர்கள் மதிப்பிலான நிவாரணத் தொகைக்கு கையெழுத்திட்டுள்ளார், ஜனாதிபதி டொனாலட்ட்ரம்ப். அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய நிவாரண நிதி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிவாரண நிதி ஒதுக்கீட்டிற்கு, ஜனநாயக கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும், தங்கள் வேறுபாடுகளைக் களைந்து, ஒரு மனதாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

யாருக்கு நிவாரணம்!

‘ஒவ்வொரு குழந்தையின் பராமரிப்புச் செலவிற்காக, 500 டொலர்கள் வழங்கப்படும். அமெரிக்காவின் அனைத்து மாநில அரசுகளுக்கும் தேவையான நிதி ஒதுக்கப்படும். ஆண்டுக்கு, 75 ஆயிரம் டாலர்களுக்கு குறைவாக ஊதியம் பெறும் அமெரிக்கர்களுக்கு இந்த நிவாரணத் தொகையிலிருந்து, 1,200 டாலர்கள் வழங்கப்படும். உடனடியாக நிதி தேவைப்படும் குடும்பங்கள், பணியாளர்கள் மற்றும் தொழிலகங்கள் கணக்கெடுக்கப்பட்டு, உடனடியாக நிதி வழங்கப்படும்’
என ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

புதிய பாதுகாப்பு சட்டம்

‘பாதுகாப்பு உற்பத்தி சட்டம்’ என்ற புதிய சட்டத்தையும் ட்ரம்ப் செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளார். இந்த சட்டம், தேசிய பாதுகாப்புக்கு தேவையான பொருட்களை, தனியார் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்ய உத்தரவிடுவதற்குத் தேவையான அதிகாரத்தை அதிபருக்கு வழங்கும்.

‘அமெரிக்காவில் மிகக் குறைந்த அளவிலேயே கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேவையான முகக் கவசங்கள் கூட அரசிடம் இல்லை. ஆரம்பத்திலேயே சுதாரிக்காமல், ஜனாதிபதி ட்ரம்ப் காட்டிய அலட்சியம் தான் கொரோனா தொற்று அமெரிக்காவில் மிக வேகமாப் பரவக் காரணமாக அமைந்துள்ளது. இனியானது அலட்சியத்தைக் கைவிட்டு துரித கதியில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட ட்ரம்ப் முன்வர வேண்டும்’ என, சமூக ஆர்வலர்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.