Breaking News

கொரோனாவால் அமெரிக்க உயிரிழப்பு 40 ஆயிரத்தை அண்மித்தது !

 

கொரோனா தொற்றுக்குள்ளாகி உலக அளவில் இதுவரை 22 லட்சத்து 51 ஆயிரத்து 401 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.உலகளவில் உயிரிழப்பு 1 லட்சத்து 54 ஆயிரத்து 278 பேராக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 71 ஆயிரத்து 342 பேராகும்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தொடர்ந்து அமெரிக்கா இருந்து வருகிறது. அங்கு இதுவரை 7லட்சத்து 10ஆயிரத்து 21 பேர் வரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பலியாவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 158 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம், அதிகம் பலியானோரைக் கொண்ட நாடுகளில் இத்தாலியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது அமெரிக்கா.

அமெரிக்கா:

மொத்தம் பாதிக்கப்பட்டோர்: 7,10,021

மொத்தம் பலியானோர்: 37,158

மொத்தம் குணமடைந்தோர்: 60,510

இத்தாலி:

மொத்தம் பாதிக்கப்பட்டோர்: 1,72,434

மொத்தம் பலியானோர்: 22,745

மொத்தம் குணமடைந்தோர்: 42,727

ஸ்பெயின்:

மொத்தம் பாதிக்கப்பட்டோர்: 1,90,839

மொத்தம் பலியானோர்: 20,002

மொத்தம் குணமடைந்தோர்: 74,797

பிரான்ஸ்:

மொத்தம் பாதிக்கப்பட்டோர்: 1,47,969

மொத்தம் பலியானோர்: 18,681

மொத்தம் குணமடைந்தோர்: 34,420

ஜேர்மனி :

மொத்தம் பாதிக்கப்பட்டோர்: 1,41,397

மொத்தம் பலியானோர்: 4,352

மொத்தம் குணமடைந்தோர்: 83,114

இந்தியா :

மொத்தம் பாதிக்கப்பட்டோர்: 14,425

மொத்தம் பலியானோர்: 488

மொத்தம் குணமடைந்தோர்: 2,045

உலக நாடுகளை உலுக்கி கொண்டிருக்கும், கொரோனா வைரஸ், ஐரோப்பிய கண்டத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. அங்கு கொரோனா பாதிப்பும், உயிர்பலியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஐரோப்பாவில் நேற்று ஒரே நாளில் 32,674 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

ஊரடங்கு உத்தரவினால் அமெரிக்காவில் பலரது வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. மிச்சிகன், ஓஹியோ, கென்டகி, மினேசோட்டா, வட கரோலினா, உடா மாகாணங்களில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி ஆளுநர்மார் நிர்வகித்து வருகின்றனர். இங்கு ஊரடங்குக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது. இந்த மாகாணங்களில் பொருளாதார வீழ்ச்சி அதிக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தின் ஒரு சிறு பகுதியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அது அவர்களது வாழ்வாதார உரிமை என மிச்சிகன் ஜனநாயக கட்சி கவர்னர் கிரெட்சென் விட்மர் சிஎன்என் பேட்டியில் தெரிவித்துள்ளார். வேலைக்குச் செல்லாமல் அவர்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவது கடினமாக உள்ள நிலையில் அவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இதனால் மிச்சிகனில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இவர்களால் சமூக விலகலை கடைபிடிக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என அரசு அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

‘கெண்டகியை திறந்துவிடுங்கள்..!’ என போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். சிறு, குறு தொழில் செய்வோர் இதனால் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தாங்கள் வெளியே வர அனுமதிக்கப்படுவதில்லை என அவர்கள் வாதிடுகின்றனர். இதனையடுத்து ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையில் இதுகுறித்து அவசர ஆலோசனை கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை ஒருபக்கம், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் திட்டம் மறுபக்கம் என அமெரிக்க அரசு தடுமாறி வருகிறது. மேலும் கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆய்வு ஒருபக்கம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதனை அரசியல் ஆக்காமல் எதிர்கட்சி ஆளுநர்மாறும் ஆளுங்கட்சியோடு ஒன்றிணைந்து மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என ஜனாதிபதி டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊரடங்கை கொஞ்சம் கொஞ்சமாகத் தளத்தலாம் என சில மாநில கவர்னர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கர்களுக்கு தங்களை தற்காத்துக்கொள்வது எப்படி எனத் தெரியும். எனவே அவர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகளை கற்பித்து வேலைக்குச் செல்ல அனுமதித்தால் அவர்கள் சமூக விலகலை கடைபிடித்துக்கொண்டே தங்கள் பணிகளைச் செய்வார்கள் என்றுள்ளனர்.

ஆனால் அமெரிக்கா தற்போது உள்ள நிலையில் அது மிகவும் ஆபத்தானது. கொரோனாவை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்த பின்னரே ஊரடங்கைத் தளர்த்த முடியும் என்கின்றனர் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்.