Breaking News

கோவிட்-19 உயிரிழப்பு இரண்டாயிரத்தை தாண்டியது !

 

சீனாவில் வேகமாக பரவி வரும், கோவிட் 19 எனப்படும் ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,004 ஆக உயர்ந்தது. வைரஸ் தாக்கம் உள்ளோர் எண்ணிக்கை, 74,185 ஆக உயர்ந்தது.

சீனாவின் ஹூபய் மாகாணம் வூஹான் நகரில், கடந்தாண்டு டிசம்பரில் ‘கொரோனா’ பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தாக்கம் தொடர்ந்து மிகவும் வேகமாக பரவியது. நாட்டின் 34 மாகாணங்களில், 31 மாகாணங்களில், இந்த வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது. இதைத் தவிர, ஜப்பான், ஹொங்காங் என, 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும், இந்த வைரஸ் பாதிப்பு பரவியது. சீனாவுக்கு சென்று திரும்பியவர்களுக்கு இந்த பாதிப்பு இருந்தது.

நேற்று 136 பேர் பலி:

இந்த வைரஸ் பாதிப்பு முதல் முதலில் தெரிய வந்து, நேற்றுடன், 50 நாட்களாகிறது. இதுவரை, சீனாவில், 2,004 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும், 136 பேர் உயிரிழந்தனர். இதுவரை, 74,185 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,749 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

பணிப்பாளர் மரணம்:

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆயிரம் படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை வூஹானில் 10 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை அளித்து வந்த, அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் லியூ ஜிமிங்க், வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று உயிரிழந்தார். இது டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.