இலங்கை

கேப்பாப்புலவு மக்களுடன் ஐ.நா வின் விசேட அறிக்கையாளர் சந்திப்பு!

– வன்னி செய்தியாளர் –

ஐக்கியநாடுகள் சபையின் அமைதியாக ஒன்றுகூடுதலுக்கும் சங்கங்களாக தொழிப்படுத்தலுக்குமான உரிமை தொடர்பான விசேட அறிக்கையாளர் அடங்கிய செயற்பாட்டுக்குழுவானது, காணிவிடுவிப்பைக்கோரி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களை, (21.07.2019) இன்றையநாள் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

ஏறக்குறைய ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இடம்பெற்ற இக் கலந்துரையாடலில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்புலவு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் குறித்த குழுவினால் கேட்டறியப்பட்டுள்ளது.

கலந்துரையாடல் தொடர்பில் கேப்பாப்புலவு மக்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதியாக ஒன்றுகூடுதலுக்கும் சங்கங்களாக தொழிப்படுத்தலுக்குமான உரிமை தொடர்பான விசேட அறிக்கையாளர் clement nyaletsossi voule தலைமையிலான ஐநா வின் விசேட குழுவினர் எம்மை சந்தித்து கலந்துரையாடினர்.

நாம் தொடர்சியாக முன்னெடுத்துச் செல்லும் போராட்டத்தின் நியாயப்பாடு, போராடத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் எம்மிடம் கேட்டறிந்தனர்.

மேலும் எமது பிரச்சினைக்கு அவர்களால் உடனடியாக தீர்வு சொல்ல முடியாத நிலையிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும், அமைப்புகளுடனும் கலந்துரையாடி எமக்குரிய தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு தாம் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தனர்.