விளையாட்டு

கேன் வில்லியம்சனுக்குக் காயம்: ஐபிஎல் ஆரம்ப ஆட்டங்களில் பங்கேற்பாரா?

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்குக் காயம் ஏற்பட்டது. தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் 3-வது டெஸ்டிலிருந்து விலகவுள்ளார்.

2-வது டெஸ்டில் வங்கதேச அணியின் முதல் இன்னிங்ஸில் வில்லியம்சனுக்குக் காயம் ஏற்பட்டது. நான்காம் நாளன்று பேட்டிங் செய்தபோது அவர் அசெளகரியத்தில் இருந்தார். இதையடுத்து எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்ததில் தோள்பட்டைக் காயம் உறுதியானது.

சனிக்கிழமையன்று மூன்றாவது டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது. நியூஸிலாந்து அணி டெஸ்ட் தொடரில் 2-0 என முன்னிலை பெற்று தொடரை வென்றுள்ளதால் உலகக் கோப்பையை முன்னிட்டு வில்லியம்சன் 3-வது டெஸ்டில் இடம்பெறமாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

வங்கதேசத் தொடர் முடிந்தவுடன் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க இந்தியாவுக்குக் கிளம்பத் தயாராக இருந்தார்  வில்லியம்சன். கடந்த வருடம் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்தார். அந்த அணி இறுதிச்சுற்று வரை முன்னேறியது. இந்நிலையில் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியின் ஆரம்ப ஆட்டங்களில் வில்லியம்சன் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. எனினும் இதுகுறித்த உறுதியான தகவல் வரும் நாள்களில் தான் தெரியவரும்.