உலகம்

குவாடனுக்கு குவிந்த பணம்; தொண்டு நிறுவனத்துக்கு வழங்க தீர்மானம்

 

 

குள்ளமாக இருப்பதால் தன்னைக் கொன்றுவிடுங்கள் என்று கண்ணீர் விட்டு அழுத காட்சி மூலம் உலகின் அனுதாபத்தை பெற்று பிரபலமாகிய அவுஸ்திரேலியாவின் 9 வயது சிறுவன் குவாடன் பேலசுக்கு குவிந்த 4.75 இலட்சம் டொலர் நிதியை தொண்டு நிறுவனத்துக்கு வழங்க அவரது குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர்.

சிறுவன் குவாடன் பேலஸ் நீண்ட நாட்களாக அமெரிக்காவின் டிஸ்னிலேண்டுக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டமைக்காக இந்தப்பணம் திரட்டப்பட்டிருந்தது.

எனினும் குவாடன் பேலஸ் டிஸ்னி லேண்டுக்குச் செல்வதைக் காட்டிலும், இந்தப் பணத்தில் சமூகத்தில் உள்ள குழந்தைகள் பயன் பெறுவதுதான் முக்கியமானதென அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த யாரகா பேல்ஸ் என்ற பெண் கடந்த புதன்கிழமை தனது 9 வயது மகன் குவாடனை பாடசாலையில் இருந்து காரில் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

பேஸ்புக் காணொளியில் குள்ளமாக தோற்றமளிக்கும் அச்சிறுவன் தனது பாடசாலைச் சீருடையில் கார் இருக்கையில் சாய்ந்துகொண்டு கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறான்.

“எனக்கு ஒரு கயிறு கொடுங்கள் அம்மா. நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். எனது இதயத்தில் கத்தியால் குத்திக்கொள்ள விரும்புகிறேன். என்னை யாராவது கொன்றுவிட வேண்டும் என விரும்புகிறேன்” என தனது தாயிடம் தேம்பித் தேம்பி அழுகிறான்.

அச்சிறுவன் குள்ளமாக இருப்பதால் வகுப்பில் சக மாணவர்கள் அவனை ஏளனம் செய்தும் துன்புறுத்தியும் வந்துள்ளனர்.

இதுகுறித்து சிறுவனின் தாய் யாரகா பேல்ஸ் தனது பதிவில், குவாடனின் உயரத்தை கேலி செய்யும் வகையில் அவன் தலையில் ஒரு மாணவன் தட்டுவதை நானே நேரில் பார்த்தேன். நான் பாடசாலையில் முறைப்பாடு செய்து பிரச்சினை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக காரில் ஓடிவந்து ஏறிய அவன், பிறகு தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அழத் தொடங்கிவிட்டான்.

ஒரு தாயாக எனது பொறுப்பிலிருந்து நான் தவறிவிட்டதாக கருதுகிறேன். நமது கல்வித் திட்டமும் தோல்வி அடைந்துவிட்டதாகவே கருதுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

குவாடனின் காணொளியை அவனது தாயார் பகிர்ந்து கொண்ட பிறகு அச்சிறுவனுக்கு ஆதரவு பெருகியது. 1 கோடியே 50 லட்சம் முறைக்கு மேல் இந்த காணொளி பார்க்கப்பட்டுள்ளது.

சிறுவனுக்கும் அவன் தாயாருக்கும் அவுஸ்திரேலிய தேசிய ரக்பி லீக் உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான ஒரு சூழலில், குவாடன் பேலசுக்கு குவிந்த 4.75 இலட்சம் டொலர் நிதியை தொண்டு நிறுவனத்துக்கு வழங்க அவரது குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர்.