உலகம்

கிளைமேக்ஸ்’க்கு காத்திருக்கும் கட்சிகள்

இந்திய பாராளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் பா.ஜ., கூட்டணியின் ஆட்சி பற்றி ஆரூடம் கூறினாலும், அக்கூட்டணிக்கு பெரும்பான்மை (272 இடங்கள்) கிடைக்காவிட்டால், தாங்கள் ஆட்சி அமைப்பது பற்றி எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.

அதே நேரம், எண்ணிக்கை குறைந்தால் என்ன செய்யலாம் என்று பா.ஜ.,வும் இன்னொரு பக்கம் சீரியசாக ஆலோசித்து வருகிறது.

சென்ற வாரம் காங்., தலைவர் ராகுல் வீட்டில் சந்தித்து மூத்த தலைவர்கள் அகமது படேல், அபிசேக் சிங்வி ஆகியோர் பேசினர்.தேசிய ஜனநாயக , அல்லாத அரசு அமைந்தால் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

ஒரு மூத்த காங்., தலைவர் கூறும்போது, ‛‛தொங்கு பார்லிமென்ட் அமைவது போல் தெரிந்தால், எவ்வளவு விரைவில் ஆட்சி அமைக்க கோர முடியுமோ அவ்வளவு விரைவில் கோருவதற்கு தயாராக இருக்கிறோம். இருப்பினும் கடைசி முடிவை சோனியாவும் ராகுலும் தான் எடுப்பர்” என்றார். எனவே, தே.ஜ., கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டால், உடனே ஏதாவது நடவடிக்கை எடுத்து, ஆட்சி அமைக்க கோர காங்., ஒரு முடிவுடன் உள்ளது.

இந்த விஷயத்தில் கர்நாடகா மாடலை பின்பற்ற காங்., முடிவு செய்துள்ளது. அங்கு சென்ற சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை பிடித்த பா.ஜ.,வை ஆட்சி அமைக்குமாறு கவர்னர் அழைத்தாலும், காங்., முந்திக்கொண்டு, ஆதரவு கொடுத்து மதச்சார்பற்ற ஜனதா தள அரசை ஏற்படுத்தியது. இப்போது அங்கு காங்.,கிற்கும் ம.ஜ.த.,க்கும் இடையே மல்லுக்கட்டு நடப்பது வேறு விஷயம்.

பா.ஜ.,வும் ரெடி:

காங்.,கின் திட்டங்கள் பா.ஜ.,வுக்கு தெரியாமல் இருக்குமா. அக்கட்சியும் தன் பங்கிற்கு தயாராகிக்கொண்டு இருக்கிறது. பா.ஜ., தலைவர் ஒருவர் கூறும்போது, ‛‛தேர்தல் சூழ்நிலை குறித்து எங்கள் கூட்டணி கட்சிகளுடன் ஏற்கனவே பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டோம். மெஜாரிட்டி கிடைத்து, ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளின் தயவு எங்களுக்கு தேவை இல்லை என்றாலும், அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம்” என்றார்.

உ.பி.,யில் தான் தங்களுக்கு இடங்கள் குறையும் என்று பா.ஜ., அஞ்சுகிறது. 2014 தேர்தலில் அங்கு மட்டும் மொத்தம் உள்ள 80 இடங்களில் 73 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றது. ‛‛உ.பி.,யில் மட்டும் எங்களுக்கு 40 இடங்கள் இழப்பு ஏற்பட்டால் ஆட்சி அமைப்பது சிரமமாகி விடும். புதிய கூட்டாளிகளை தேட வேண்டியது தான். மேற்கு வங்கம், ஒடிஷாவில் கூடுதல் இடங்கள் கிடைத்தால் அதை வைத்து சமாளிக்க வேண்டும்”என்றார் இன்னொரு பா.ஜ., தலைவர்.

– நன்றி – தினமலர் –