Breaking News

கிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் இனி விசாரணை இல்லை – விசேட விசாரணைப் பிரிவு

கிரிக்கெட் வீரர்கள் தரப்பில் எந்தவிதமான ஆட்ட நிர்ணய சதியும் இடம்பெறவில்லை என விளையாட்டுத் துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவின் தலைவர் ஜகத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் இதுவரை பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலங்கள் போதுமானதாக காணப்படுவதனால், எதிர்காலத்தில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக கிரிக்கெட் வீரர்கள் விசேட விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியின் போது ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் அண்மையில் தனியார் ஊடகமொன்றில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் கூறியதை தொடர்ந்து அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா, முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் உபுல் தரங்க ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் இன்றைய தினம் மஹேல ஜயவர்தன விசாரணை குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அதன் பின்னர் அவருக்கு வாக்குமூலம் வழங்குவதற்கு வேறொரு தினம் வழங்குவதாக விளையாட்டுத் துறையின் விசேட விசாரணைப் பிரிவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.